பொதுமக்களுக்கு மரியாதை கொடுங்கள், நாம் அவர்களின் சேவகர்கள் - காபூல் விமான நிலையத்தில் தமது போராளிகளுக்கு அறிவுரை வழங்கும் தலிபான் தலைவர்கள் - News View

About Us

About Us

Breaking

Tuesday, August 31, 2021

பொதுமக்களுக்கு மரியாதை கொடுங்கள், நாம் அவர்களின் சேவகர்கள் - காபூல் விமான நிலையத்தில் தமது போராளிகளுக்கு அறிவுரை வழங்கும் தலிபான் தலைவர்கள்

ஆப்கானிஸ்தானில் வாழும் பொதுமக்கள் மரியாதையாக நடத்தப்பட வேண்டும். நாம் அவர்களின் சேவகர்கள் என்று ஆயுதமேந்திய தங்களுடைய போராளிகளிடம் தலிபான் தலைவர்கள் பேசும் காணொளி தற்போது வெளியாகியிருக்கிறது.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை விட்டு அமெரிக்காவின் கடைசி விமானம் இன்று புறப்பட்ட நிலையில், அந்த நாட்டில் வெளிநாட்டுப் படைகளின் ஆக்கிரமிப்பு பூண்டோடு வெளியேறியிருக்கிறது.

இதையடுத்து அந்த விமான நிலைய பாதுகாப்பை முழுமையாக தலிபான்கள் ஏற்றுள்ளனர். முழு சீரூடையில் தோற்றமளிக்கும் தலிபான் போராளிகளிடையே தலிபான் தலைவர்கள் இன்று பேசினார்கள்.

அப்போது, அமெரிக்க தலைமையிலான வெளிநாட்டுப் படைகள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறிய செயலுக்காக அவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

தலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபியுல்லா முஜாஹித் பேசும்போது, "உங்களுடைய தியாகங்களை நினைத்து நாங்கள் பெருமை கொள்கிறோம். நீங்களும் உங்களுடைய தலைமைகளும் அனுபவித்த கடுமையான இன்னல்களாலேயே இதை சாதிக்க முடிந்திருக்கிறது. நமது நேர்மை மற்றும் பொறுமையால்தான் இந்த நாடு இன்று அன்னிய சக்திகளிடம் இருந்து விடுபட்டுள்ளது," என்றார்.

"நம் நாடு மீது இனியும் ஒரு தாக்குதலை அன்னிய சக்திகள் நடத்தக்கூடாது. நமக்கு மகிழ்ச்சியும் வளமும் உண்மையான இஸ்லாமிய ஒழுங்கும் தேவை." "ஆப்கானிஸ்தானில் வாழும் மக்கள் மதிப்புடன் நடத்தப்பட வேண்டும். அதை உறுதிப்படுத்துங்கள். அதில் மிகவும் கவனமாக இருங்கள். இந்த நாடு ஏராளமான துயரத்தை அனுபவித்து விட்டது. ஆப்கன் மக்கள் அவர்களுக்கு உரிய அன்பையும் அனுதாபத்தையும் பெற உகந்தவர்கள். எனவே அவர்களை மதிப்புடன் நடத்துங்கள். நாம் அவர்களுடைய சேவகர்கள். நாம் அவர்களை கட்டுப்படுத்துபவர்கள் அல்ல," என்றார் முஜாஹித்.

இதேவேளை விமான நிலையத்தில் மற்றொரு தலிபான் தலைவர் ஹன்ஸ் ஹக்கானி பேசும்போது, "மக்கள் மகிழ்ச்சியாக உள்ளனர். இங்கு பலரும் அமைதி திரும்ப விரும்பவில்லை. அமெரிக்க ஆக்கிரமிப்பே நீடிக்க வேண்டும் என அவர்கள் கருதினர்," என்று கூறினார்.

"நான் ஒரு மருத்துவரிடம் பேசினேன். அவர் முன்பு இங்குள்ள மருத்துவ நிலையங்களில் குண்டடிபட்டவர்கள் நிறைந்திருந்தனர். இப்போது நிலைமை அப்படியில்லை என்றார். எப்போதெல்லாம் ஆட்சி மாற்றம் ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் சவால்கள் முதலாவதாக நம் முன் வந்து நிற்கும். வீடுகளை மாற்றும்போது சில இழப்புகள் வரும். அத்தகைய மாற்றமே இப்போது ஏற்பட்டுள்ளது," என்றார் ஹக்கானி.

தலிபான்களிடம் ஹக்கானி குழுவின் தலைவர் பேசும் காணொளியை தாரிக் கஸ்னிவாலா என்ற அவர்களின் ஊடக பொறுப்பாளர் தமது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். அந்த காணொளி, சமூக ஊடகங்களில் வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது.

Social embed from twitter

No comments:

Post a Comment