ஆப்கானிஸ்தான் விவகாரம் : இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டத்தைக் கூட்ட வலியுறுத்தும் மலேசியாவின் பாரிசான் கூட்டணி - News View

Breaking

Saturday, August 28, 2021

ஆப்கானிஸ்தான் விவகாரம் : இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டத்தைக் கூட்ட வலியுறுத்தும் மலேசியாவின் பாரிசான் கூட்டணி

ஆப்கானிஸ்தான் விவகாரம் தொடர்பாக இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் சிறப்புக் கூட்டத்தை நடத்துவதற்கு மலேசியா குரல் கொடுக்க வேண்டும் என மலேசிய அரசாங்கத்தில் இடம்பெற்றுள்ள தேசிய முன்னணி (பாரிசான் நேசனல்) கூட்டணிக் கட்சிகள் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த பிறகு நடைபெற்று வரும் நிகழ்வுகள் குறித்து விவாதிக்க வேண்டும் என அக்கூட்டணியின் பொதுச் செயலாளர் ஸாம்ப்ரி அப்துல் காதிர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கை ஒன்றில், ஆப்கானிஸ்தானின் எதிர்காலம் தொடர்பான விஷயங்களில் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பில் ஒருமித்த கருத்தை எட்டுவதில் நடுநிலையான, உலக அரங்கில் மதிப்புமிக்க இஸ்லாமிய நாடாக விளங்கும் மலேசியாவுக்கு என சொந்த செல்வாக்கு உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

"கத்தார் தலைநகர் தோஹாவில் உள்ள தலிபான் குழுவுடன் மலேசியா முன்கூட்டியே தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வதன் மூலம், தேவை ஏற்படும் பட்சத்தில், ஆஃப்கன் மக்களுக்கான மனிதாபிமான உதவிகளை எளிதில் கொண்டு சேர்க்க முடியும்."

"மேலும், தலிபான் அரசு அல்லது ஆட்சியை அங்கீகரிக்கும் விஷயத்தில் நீண்ட காலமாக மலேசியா கடைப்பிடித்து வரும் அனைத்துலக உறவுகள் தொடர்பான கொள்கைகள், கோட்பாடுகளை நமது அரசாங்கம் பின்பற்ற வேண்டும். தலிபான்களுக்கு என இதில் தனிச் சலுகைகள், சிறப்பு விதிவிலக்குகள் ஏதும் இருக்கக்கூடாது," என்று பொதுச் செயலாளர் ஸாம்ப்ரி அப்துல் காதிர் தெரிவித்துள்ளார்.

தேசிய முன்னணி எனப்படும் பாரிசான் நேசனல் கூட்டணியில், மலேசியாவின் பெரும்பான்மை இனத்தவர்களான மலாய்க்காரர்களைப் பிரதிநிதிக்கும் அம்னோ (UMNO), மலேசிய இந்தியர் காங்கிரஸ், மலேசிய சீன சங்கம் (MCA) ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

No comments:

Post a Comment