இந்திய சீருடையுடன் களத்தடுப்பாளர், துடுப்பாட்ட வீரராக மைதானத்திற்குள் நுழைந்த ரசிகர் ! - News View

Breaking

Saturday, August 28, 2021

இந்திய சீருடையுடன் களத்தடுப்பாளர், துடுப்பாட்ட வீரராக மைதானத்திற்குள் நுழைந்த ரசிகர் !

கிரிக்கெட் போட்டிகள் இடம்பெற்ற நிலையில் ரசிகர் ஒருவர் இந்திய அணியின் சீருடையையொத்த சீருடைகளை அணிந்து களத்தடுப்பு வீரரைப் போன்றும் துடுப்பாட்ட வீரரைப் போன்றும் போட்டிகளின் நடுவில் சென்று பெரும் ஆச்சரியத்தையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளார்.

இங்கிலாந்தைச் சேர்ந்த ஜார்வோ என்ற ரசிகரே இவ்வாறு தனது செயல்கள் மூலம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையே லோர்ட்ஸில் இடம்பெற்ற 2 ஆவது டெஸ்ட்டின் போது மைதானத்திற்குள் நுழைந்த ரசிகரான ஜார்வோ, தற்போது லீட்ஸில் நடைபெற்று வரும் 2 ஆவது டெஸ்ட் போட்டியின் போதும் இடைநடுவில் நுழைந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

ஜார்வோ என்ற ரசிகர் கடந்த கிழமை இடம்பெற்ற இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட்டின் போது இந்தியாவின் சீருடையை அணிந்து கொண்டு சக களத்தடுப்பு வீரர் போன்று மைதானத்திற்குள் நுழைந்தார். பின்னர் மைதானத்தில் இருந்த காவலர்கள் மூலம் அவர் எச்சரிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார்.

இந்நிலையில் லீட்ஸில் தற்போது நடைபெற்று வரும் 3 ஆவது டெஸ்ட் போட்டியின் போது ரோகித் சர்மா ஆட்டமிழந்து வெளியேறிய போது, விராட் கோலி ஆடுகளத்துக்குள் நுழைவதற்கு முன்னதாக ஜார்வோ இந்திய துடுப்பாட்ட வீரர் போன்று ஆடுகளம் வரை சென்றுவிட்டார்.

பின்னர் காவலர்கள் அவரை அப்புறப்படுத்த முயன்ற போது ஜார்வோ அடம் பிடித்தபடியே வெளியேற மறுத்துள்ளார். இந்த ரசிகரின் செயல் நகைச்சுவையாக பார்க்கப்பட்டாலும் பாதுகாப்புகளை மீறி ரசிகர் ஒருவர் மீண்டும் மீண்டும் மைதானத்திற்குள் நுழைவது பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இதேவேளை இந்தியர் ரசிகர்கள் மத்தியில் ஜார்வோ மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment