அத்தியாவசிய சேவைகளுக்கு வழங்கும் அனுமதியை துஷ்பிரயோகம் செய்யாதீர் : நாட்டு மக்களிடம் இராணுவத் தளபதி வேண்டுகோள் - News View

About Us

About Us

Breaking

Sunday, August 22, 2021

அத்தியாவசிய சேவைகளுக்கு வழங்கும் அனுமதியை துஷ்பிரயோகம் செய்யாதீர் : நாட்டு மக்களிடம் இராணுவத் தளபதி வேண்டுகோள்

தனிமைப்படுத்தலுக்கான ஊரடங்குச் சட்டம் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்டு கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் நாட்டு மக்கள் அதற்கு தமது முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என கொரோனா வைரஸ் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவர் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். 

ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் உள்ள காலத்தில் அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் அதனை துஷ்பிரயோகம் செய்ய வேண்டாம் என்றும் அவர் நாட்டு மக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

நேற்று முன்தினம் இரவு 10 மணி முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் தனிமைப்படுத்தலுக்கான ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் 60 வயதிற்கு மேற்பட்ட, இதுவரை தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ளாமல் உள்ள நபர்களை இனங்கண்டு அவர்களுக்கு தடுப்பூசிகளை பெற்றுக் கொடுப்பதே தனிமைப்படுதலுக்கான ஊரடங்கு சட்டத்தின் முக்கிய நோக்கமாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தனிமைப்படுதலுக்கான ஊரடங்கு சட்டம் நடைமுறையில் இருந்தாலும் தடுப்பூசிகளை வழங்கும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் தடையின்றி முன்னெடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

No comments:

Post a Comment