கொவிட் அச்சுறுத்தலிலிருந்து மக்களை பாதுகாப்பதற்கு தற்போது தேவைப்படுவது பொருளாதாரமா ? ஒட்சிசனா என்பதை அரசாங்கம் தீர்மானிக்க வேண்டும். கொவிட் ஆபத்திலிருந்து மக்களின் உயிரை பாதுகாப்பதே சகலரதும் பிரதான பொறுப்பாகும். அதன் பின்னர் பொருளாதாரத்தில் கவனம் செலுத்தலாம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
தற்போது நாட்டில் நிலவும் உண்மையான நிலையை அரசாங்கம் உடனடியாக வெளிப்படுத்த வேண்டும். போலியான தரவுகளை மக்களுக்கு வழங்குவதை நிறுத்த வேண்டும் என்றும் எதிர்க்கட்சி தலைவர் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, நாட்டின் மோசமான சூழ்நிலையில், மக்களை வாழ வைக்க தேவையானது பொருளாதாரமா அல்லது ஒட்சிசனா என்பதில் ஒன்றை அரசாங்கம் முடிவு செய்ய வேண்டும். நாடு உடனடியாக மூடப்படுவதைத் தவிர வேறு மாற்று வழியில்லை.
இந்த ஆபத்திலிருந்து மக்களைப் பாதுகாப்பது அனைவரினதும் பொறுப்பாகும். அதன் பின்னர் பொருளாதாரத்தை கருத்தில் கொள்ளலாம்.
மூன்றாவது கட்டமாக வழங்குவதற்கு தேவையான தடுப்பூசிகளை உடனடியாக கொள்வனவு செய்ய வேண்டும். இதுவரையில் தடுப்பூசி வழங்கப்படாதோருக்கு துரிதமாக அதனை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
இந்த நெருக்கடியான நேரத்தில் எரிவாயு விலையை உயர்த்தி, மக்கள் மீது சுமையை சுமத்தும் அரசாங்கத்தின் மனிதாபிமானமற்ற முடிவிற்கு கடும் எதிர்ப்பை வெளியிடுகின்றோம். எரிவாயு விலையை உடனடியாக குறைத்து அதன் மூலம் மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.
தற்போது நாட்டில் நிலவும் உண்மையான நிலையை அரசாங்கம் உடனடியாக வெளிப்படுத்த வேண்டும். போலியான தரவுகளை மக்களுக்கு வழங்குவதை நிறுத்த வேண்டும். நாட்டுக்கு உண்மையை வெளிப்படுத்தும் பொறுப்பிலிருந்து அரசாங்கம் தப்பி ஓடக் கூடாது. இந்த பேரழிவை சமாளிக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
No comments:
Post a Comment