தப்போவ சரணாலயத்தில் இரண்டு சட்டவிரோத துப்பாக்கிகள் உள்ளிட்ட உபகரணங்களுடன் நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கருவலகஸ்வெவ வனவிலங்கு பாதுகாப்பு அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறித்த பகுதியில் கடந்த சனிக்கிழமையும் (28), ஞாயிற்றுக்கிழமையும் (29) இரண்டு இடங்களில் மேற்கொள்ளப்பட்ட விஷேட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது, தப்போவ சரணாலயத்தின் துத்தனேரிய பகுதியில் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களிடமிருந்து ஒரு கெப் துப்பாக்கி (வெடிமருந்து துப்பாக்கி), ஈய வெடி மருந்துகள் மற்றும் தீப் பெட்டிகள் உள்ளிட்ட சில உபகரணங்கள் மீட்கப்பட்டுள்ளது.
மேலும் தப்போவ சரணாலயத்தில் உள்ள எரமுதுகஸ்வௌ பகுதியில் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களிடமிருந்து 12 துளை துப்பாக்கி, வெடி மருந்து பொருட்கள், 03 மின் விளக்குகள் உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் கருவலகஸ்வெவ வனவிலங்கு பாதுகாப்பு அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தப்போவ சரணாலயத்தின் துத்தனேரிய பகுதியில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும், புத்தளம் வன்னாத்தவில்லு பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாவர்.
இவர்கள் இருவரும் துத்தனேரிய பகுதியில் தங்கியிருந்து சட்டவிரோத துப்பாக்கியை பயன்படுத்தி காட்டு மிருகங்களை வேட்டையாடி வருவதாக மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக கருவலகஸ்வெவ வனவிலங்கு பாதுகாப்பு அலுவலக அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
அத்துடன், எரமுதுகஸ்வௌ பகுதியில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் கருவலகஸ்வெவ குடாமெதவாச்சிய பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
இவர்கள் இருவரும் மிருகங்களை வேட்டையாடும் நோக்கில் சட்டவிரோத துப்பாக்கி மற்றும் உபகரணங்களுடன் தப்போவ சரணாலய எல்லைப் பகுதிகளுக்குள் நுழைந்துள்ளதாகவும் கருவலகஸ்வெவ வனவிலங்கு பாதுகாப்பு அலுவலக அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.
இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை கருவலகஸ்வெவ வனவிலங்கு பாதுகாப்பு அலுவலக அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
புத்தளம் நிருபர் ரஸ்மின்
No comments:
Post a Comment