புத்தளத்தில் இறந்த நிலையில் கரையொதுங்கிய கடல் ஆமை - News View

Breaking

Saturday, August 28, 2021

புத்தளத்தில் இறந்த நிலையில் கரையொதுங்கிய கடல் ஆமை

புத்தளம் மாவட்டத்தின் முந்தல் பிரதேச செயலகத்திற்குட்பட்ட உடப்பு பிரதேச கடற்கரையோரத்தில் இறந்த நிலையில் கடல் ஆமையொன்று நேற்று கரையொதுங்கியுள்ளது.

குறித்த பிரதேசத்தில் இவ்வாறு இறந்த நிலையில் கடல் ஆமையொன்று கரையொதுங்கியுள்ளதாக கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய, ஆனைவிழுந்தான் வன விலங்கு அலுவலக அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வருகை தந்து கரையொதுங்கிய ஆமையை மீட்டு விசாரணைகளை முன்னெடுத்தனர்.

இவ்வாறு கரையொதுங்கிய 45 கிலோ கிராம் நிறையுள்ள குறித்த கடல் ஆமையின் உடல் மேலதிக உடற்கூற்று பரிசோதனைக்காக ஆனைவிழுந்தான் வன விலங்கு அலுவலகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

இதேவேளை, கடந்த சில மாதங்களில் மட்டும் புத்தளம் மாவட்டத்தில் பல கடல் ஆமைகளும், பல டொல்பின்களும், சுறா மீன்களும் இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

விலங்குகள் மற்றும் தாவர பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ், சகல கடல் வாழ் ஆமைகள், அதனது குஞ்சுகள் மற்றும் முட்டைகள் என்பன இலங்கையில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், அண்மையில் எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக பல தொன் நிறை கொண்ட இரசாயனம் கடல் நீரில் கலந்துள்ளமையால்தான் இவ்வாறு கடல் ஆமைகளும், மீன்களும் உயிரிழந்த நிலையில் கரையொதுங்குவதாக தொர்ச்சியாக குற்றம் சாட்டப்பட்டு வருகின்றது.

எனினும், குறித்த கடல் ஆமைகள் உள்ளிட்ட கடல் வாழ் உயிரினங்கள் இறந்து கரையொதுங்குவதற்கான காரணங்களை கண்டறிய வனஜீவராசிகள் திணைக்களம் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad