அடையாளம் காணப்படாமல் 48 சடலங்கள் வைக்கப்பட்டிருந்தமையே இடப்பற்றாக்குறைக்கு பிரதான காரணம், துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள விசேட குழு - அமைச்சர் நிமல் லன்சா - News View

About Us

About Us

Breaking

Sunday, August 15, 2021

அடையாளம் காணப்படாமல் 48 சடலங்கள் வைக்கப்பட்டிருந்தமையே இடப்பற்றாக்குறைக்கு பிரதான காரணம், துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள விசேட குழு - அமைச்சர் நிமல் லன்சா

(எம்.மனோசித்ரா)

ராகமை வைத்தியசாலையில் கடந்த 6 மாதங்களாக அடையாளம் காணப்படாத நிலைமையில் இறுதிக்கிரியைகளை முன்னெடுக்காமல் 48 சடலங்கள் வைக்கப்பட்டிருந்தமையே அண்மையில் அங்குள்ள பிரேத அறையில் இடப்பற்றாக்குறை ஏற்பட பிரதான காரணமாகும் என்று கிராமிய வீதிகள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா தெரிவித்துள்ளார்.

இவற்றில் 28 சடலங்கள் தற்போது அடக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், எஞ்சியவற்றை வெகுவிரைவில் அடக்கம் அல்லது தகனம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா தெரிவித்துள்ளார்.

சடலங்கள் தொடர்பில் துரித நடவடிக்கைகளை செயற்படுத்துவதற்காக உள்ளுராட்சி உறுப்பினர்கள், பொலிஸார், முப்படையினர், அரச அதிகாரிகள் மற்றும் வைத்தியசாலை அதிகாரிகள் ஆகியோரை உள்ளடக்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த 6 மாதங்களாக அடையாளம் காணப்படாத 48 சடலங்கள் இறுதிக்கிரிகைகள் செய்யப்படாமல் வைக்கப்பட்டிருந்தமையே அண்மையில் ராகம வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலங்களை வைப்பதற்கான இடப்பற்றாக்குறை ஏற்பட பிரதான காரணமாகும்.

எனவே நீதிமன்ற நடவடிக்கைகள் ஊடாக குறித்த சடலங்களுக்கான இறுதிக்கிரியைகளை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய 28 சடலங்கள் மட்டக்களப்பு - ஓட்டமாவடி பிரதேசத்திலும், ராகமை தலகொல்ல பொது மயானத்திலும் அடக்கம் செய்யப்பட்டுள்ளன. எஞ்சியுள்ள சடலங்களை அடக்கம் செய்வதற்கான நடவடிக்கைகள் பாதுகாப்பு பிரினரின் ஒத்துழைப்புடன் எதிர்வரும் சில தினங்களுக்குள் முன்னெடுக்கப்படும்.

கொவிட் தொற்றால் உயிரிழந்தவர்களின் சடலங்களை பொறுப்பேற்கவுள்ள உறவினர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை, கம்பஹா மாவட்டத்திலிருந்து வெளியேறுதல், உறவினர்களை இனங்காண முடியாமை உள்ளிட்ட காரணிகளால் ஏற்பட்ட தாமதங்களை தவிர்த்து, உறவினர்களுடன் துரிதமாக தொடர்புகளை ஏற்படுத்தி குறித்த சடலங்களை முறையாக தாமதமின்றி தகனம் அல்லது அடக்கம் செய்வதற்கு தேவையான ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளும் இந்த குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

கம்பஹா மாவட்டத்தின் கொவிட் கட்டுப்பாட்டு செயலணி, மாவட்ட அபிவிருத்தி குழு, குறித்த பிரதேச அபிவிருத்தி குழு என்பவற்றின் ஊடாக சுகாதார மற்றும் பாதுகாப்பு பிரிவுகளுக்கு தேவையான ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசண்ண ரணதுங்கவின் ஆலோசனைக்கமைய அரசியல் அதிகாரிகள், உள்ளுராட்சி உறுப்பினர்கள் ஆகியோரும் இதற்கான ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும் என்று இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment