17 வருட கால கிரிக்கெட் வாழ்க்கைக்கு விடை கொடுத்தார் டேல் ஸ்டெய்ன் - News View

Breaking

Tuesday, August 31, 2021

17 வருட கால கிரிக்கெட் வாழ்க்கைக்கு விடை கொடுத்தார் டேல் ஸ்டெய்ன்

(எம்.எம்.சில்வெஸ்டர்)

தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான டேல் ஸ்டெய்ன் சர்வதேச கிரிக்கெட் அரங்கிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இதன் மூலம் 38 வயதான டேல் ஸ்டெய்னின் 17 வருட கால சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை நிறைவுக்கு வருகிறது.

2004 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 17 ஆம் திகதியன்று இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூலம் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் காலடியெடுத்து வைத்த டேல் ஸ்டெய்ன், 699 சர்வதேச விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

இதில் டெஸ்ட் அரங்கில் 439 விக்கெட்டுகளும், சர்வ‍தேச ஒருநாள் அரங்கில் 196 விக்கெட்டுகளும், சர்வதேச இருபதுக்கு 20 அரங்கில் 64 விக்கெட்டுகளும் அடங்கும்.

டேல் ஸ்டெய்னின் பந்துவீச்சுக்கு முகம் கொடுப்பது என்பது துடுப்பாட்ட வீரர்களுக்கு பெரும் சவாலாகும். அவரின் பந்துவீச்சை எதிர்கொள்வதற்கு அதிரடித்துடுப்பாட்ட வீரர்கள் கூட அஞ்சுவார்கள்.

அவர் வீசும் 'பவுன்சர்' வகை பந்து, 'இன் சுவிங்' பந்து, 'அவுட் சுவிங்' பந்துவீச்சு என்றாலே துடுப்பாட்ட வீரர்கள் ஒரு கணம் பெருமூச்சு விடுவார்கள்.

அவர் ஒரு முறை தொலைக்காட்சி நேர்காணலொன்றின்போது கூறிய ஒரு விடயம் நினைவுக்கு வருகிறது. அது என்னவெனில், நான் நாயகன் அல்ல; நான் அவர்களுக்கு எல்லாம் வில்லன் (I am not a Hero ; I am Villain for them) என்பதாகும்.

டேல் ஸ்டெய்ன் ‍தென்னாபிரிக்க அணிக்காக 93 டெஸ்ட் போட்டிகள், 125 சர்வதேச ஒருநாள் போட்டிகள், 47 சர்வதேச இருபதுக்கு 20 போட்டிகளில் விளையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment