மொடர்னா தடுப்பூசியில் கலப்படம் இருப்பதாக அச்சம் : 16 லட்சம் டோஸ்களை நிறுத்தி வைத்தது ஜப்பான் - News View

Breaking

Thursday, August 26, 2021

மொடர்னா தடுப்பூசியில் கலப்படம் இருப்பதாக அச்சம் : 16 லட்சம் டோஸ்களை நிறுத்தி வைத்தது ஜப்பான்

தடுப்பூசி மருந்துக் குப்பிகளில் கலப்படம் இருப்பதாகக் கூறி ஜப்பானில் கொரோனாவுக்கு எதிரான மொடர்னா தடுப்பூசியின் 16.3 லட்சம் டோஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

5.6 லட்சம் தடுப்பூசி மருந்து குப்பிகளைக் கொண்ட ஒரு பேட்சில் சில டோஸ்களில் மருந்து அல்லாத வேறு கலப்பட பொருள்கள் (ஃபாரின் ஆப்ஜக்ட்ஸ்) இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக ஜப்பான் சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.

அதீத முன்னெச்சரிக்கை காரணமாக மூன்று பேட்ச் மருந்துகளை மொடர்னா நிறுவனம் நிறுத்தி வைத்துள்ளதாக ஜப்பானில் மொடர்னா தடுப்பூசியை விநியோகம் - விற்பனை செய்கிற டகேடா ஃபார்மசியூட்டிகல் நிறுவனம் கூறியுள்ளது.

ஸ்பெயினில் உள்ள உற்பத்தி ஒப்பந்தத்தளம் ஒன்றில் ஏற்பட்ட னை காரணமாக இது நிகழ்ந்திருக்க வாய்ப்புள்ளது என்று கூறிய அந்நிறுவனம் மேற்கொண்டு அது பற்றி விவரிக்கவில்லை.

"தடுப்பூசியின் வீரியம், பாதுகாப்பு தொடர்பான எந்தப் பிரச்சினையும் இதுநாள் வரை அடையாளம் காணப்படவில்லை," என்று மொடர்னா கூறியுள்ளது.

சில டோஸ்களில் 'ஃபாரின் ஆப்ஜக்ட்ஸ்', அதாவது மருந்தல்லாத வேறு பொருட்கள், இருப்பதாக கூறப்பட்டிருந்தாலும், அவை எவ்விதமான பொருட்கள் என்ற விவரம் இல்லை. அவை துகள்கள் என்று டகேடா கூறியுள்ளது. இது கண்டுபிடிக்கப்பட்ட பிறகு அவசர ஆய்வு நடத்தப்பட்டதாகவும் கூறுகிறது டகேடா.

ஜப்பான் டைம்ஸ் செய்தித் தாளில் வெளியான செய்தியில் வேறு 7 தடுப்பூசி மையங்களில் இருந்தும் கலப்படம் குறித்துப் புகார்கள் வந்துள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மையங்களில் 390 டோஸ்கள் அடங்கிய 39 குப்பிகளில் கலப்படம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

'பிரச்னைக்குரிய பேட்ச் எண்களை ஜப்பான் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. நிறுத்தி வைப்பதற்கு முன்பு இந்த பேட்ச்களில் உள்ள மருந்துகளை செலுத்திக் கொண்டவர்கள், தாங்கள் செலுத்திக் கொண்டது கலப்படமான தடுப்பூசியா என்பதை பரிசோதித்துக் கொள்ள முடியும் என்பதற்காக இப்படி பேட்ச் எண் வெளியிடப்பட்டுள்ளது,' என்று ஜப்பான் டைம்ஸ் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

ஜப்பானில் கோவிட் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேலும் 8 மாவட்டங்களில் (prefectures) புதன்கிழமை அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் தலைநகர் டோக்யோவில் தற்போது பேராலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன.

ஃபைசர், ஆஸ்ட்ராசெனிகா தடுப்பூசிகளுக்கு ஏற்கெனவே ஜப்பானில் அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த மே மாதம்தான் மொடர்னா தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்பட்டது.

ஜப்பான் மக்கள் தொகையில் 40 சதவீதம் பேர் முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்டார்கள். சுமார் 50 சதவீதம் பேர் ஒரு டோஸ் செலுத்திக் கொண்டுள்ளனர்.

No comments:

Post a Comment