சப்ரகமுவ மாகாண ஆளுநரின் நடவடிக்கையை இரத்துச் செய்தது இரத்தினபுரி நீதிமன்றம் - News View

Breaking

Thursday, August 26, 2021

சப்ரகமுவ மாகாண ஆளுநரின் நடவடிக்கையை இரத்துச் செய்தது இரத்தினபுரி நீதிமன்றம்

(எம்.எப்.எம்.பஸீர்)

பலாங்கொடை நகர சபை தலைவர் பதவியிலிருந்து சாமிக ஜெயமினி விமலசேனவை தற்காலிகமாக பணி இடை நீக்கம் செய்த சப்ரகமுவ மாகாண ஆளுநரின் நடவடிக்கையை இரத்து செய்து, இரத்தினபுரி - மாகாண மேல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அத்துடன் பலாங்கொடை நகர சபை தலைவர் விவகாரத்தில், ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ மேற்கொண்டு எந்த நடவடிக்கைகளையும் எடுக்கக் கூடாது எனவும் நீதிமன்றம் உத்தர்வு பிறப்பித்துள்ளது.

அத்துடன் மனுதாரரான பலாங்கொடை நகர சபையின் தலைவருக்கு எதிராக, நகர சபை கட்டளைச் சட்டத்தின் 184 (1) ஆம் பிரிவின் கீழ், குற்றச்சாட்டுக்களை விசாரிக்க ஆளுநரினால் நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதியின் நியமனத்தையும் நீதிமன்றம் இரத்து செய்து உத்தரவிட்டது.

இரத்தினபுரி - மாகாண மேல் நீஹிமன்ற நீதிபதி லங்கா ஜயரத்ன இதற்கான உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.

தன்னை பணி இடைநீக்கம் செய்தமையை சவாலுக்கு உட்படுத்தி, பலாங்கொடை நகர சபை தலைவர் சாமிக ஜயமினி விமலசேன தாக்கல் செய்துள்ள விஷேட மனு மீதான விசாரணைகளின் போதே நீதிபதி இந்த தடை உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.

இம்மனுவின் முதலாம் பிரதிவாதியாக சப்ரகமுவ ஆளுநரும் 2 ஆம் பிரதிவாதியாக நகர சபையின் பிரதித் தலைவரும் பெயரிடப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் ' மனுதாரருக்கு எதிரான விசாரணைகளுக்கு ஓய்வு பெற்ற நீதித்துறை அதிகாரியை விசாரணைக்கு நியமித்தமை, ஆளுநரால் எந்த அடிப்படையும் நியாயமும் இன்றி எடுக்கப்பட்ட முடிவாகும். எனவே அந்த முடிவை இந்த நீதிமன்றம் தடை மாற்று நீதிப் பேராணை (Writ of Certiorari) ஊடாக வலுவிழக்கச் செய்கிறது.

அத்துடன் விசாரணை முடியும் வரை, மனுதாரரை பணி இடைநீக்கம் செய்ய ஆளுநர் எடுத்த முடிவையும், அக்காலப்பகுதியில் மனுவின் 2 ஆவது பிரதிவாதியான எம்.டி.எம். ரூமி (பிரதித் தலைவர்) நகர சபை தலைவரின் அதிகாரங்களை பயன்படுத்தவும் இந்த நீதிமன்றம் தடை விதித்து தடைமாற்று நீதிப் பேராணையை பிறப்பிக்கிறது.' என நீதிபதி லங்கா ஜயரத்ன அறிவித்தார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்ற தேர்தல் ஊடாக, மனுதாரர் தான் பலாங்கொடை நகர சபைக்கு தெரிவு செய்யப்பட்டதாகவும், நகர சபை தலைவராக கடமையாற்றிய காலத்தில் அந்நடவடிக்கைகள் குறித்து பல்வேறு விருதுகளையும் தான் பெற்றுள்ளதாகவும் மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறான நிலையில், கடந்த ஜனவரி மாதம் 12 ஆம் திகதி நடந்த நகர சபை பொதுக் கூட்டம் தொடர்பில் ஆளுநருக்கு தான் விஷேட கடிதம் ஒன்றினை எழுதியதாகவும், அதனைத் தொடர்ந்து ஜனவரி 15 ஆம் திகதி அந்த விடயம் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டதாகவும் மனுதாரர் சுட்டிக்காட்டும் நிலையில், நகர சபை கட்டளைச் சட்டத்தின் 184 (1) ஆம் பிரிவை நகர சபை தலைவர் (மனுதாரர்) மீறியுள்ளாரா என்பதை ஆராய ஆளுநர் ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி ஒருவரை நியமித்ததாகவும் குறித்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன் விசாரணை முடிவடையும் வரை, மனுதாரரான தன்னை நகர சபை தலைவர் பதவியிலிருந்து ஆளுநர் இடை நீக்கம் செய்ததாகவும், தனது பதவியில் பதில் கடமைகளை முன்னெடுக்க பிரதித் தலைவரை நியமித்ததாகவும் மனுதாரர் குறித்த மனுவில் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் மனுதாரர் சார்பில் சட்டத்தரணி நெவில் கருணாரத்னவின் ஆலோசனைக்கு அமைய இம்மனு மீதான விசாரணைகளில் ஆஜரான சிரேஷ்ட சட்டத்தரணி சமிந்த அத்துகோரள, மனுதாரர் பனி இடை நீக்கம் செய்யப்பட முன்னர் அவரிடம் எந்த விளக்கங்களும் கோரப்படவில்லை எனவும், எந்த அடிப்படையும் இல்லாத 9 குற்றச்சாட்டுக்களை முன் வைத்து பனி இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்லதாகவும் சுட்டிக்காட்டினார்.

இந்நிலையில் ஆளுநரின் நடவடிக்கை சட்ட விரோதமானது என அறிவிக்க வேண்டும் என அவர் கோரினார். இந்நிலையிலேயே விடயங்களை ஆராய்ந்த மேல் நீதிமன்ற நீதிபதி லங்கா ஜயரத்ன, ஆளுநரின் தீர்மாங்களை தடைமாற்று நீதிப் பேராணை ஊடாக இரத்து செய்து உத்தரவு பிறப்பித்தார்.

No comments:

Post a Comment