(எம்.மனோசித்ரா)
கொவிட் வைரஸ் தொற்றின் காரணமாக இலங்கையில் இதுவரையில் 14 கர்ப்பிணி தாய்மார் உயிரிழந்துள்ளதோடு, 5 வயதுக்கு குறைவான 13 குழந்தைகளும் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் குடும்ப சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சித்ரமாலி டி சில்வா தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், நாட்டில் கொவிட் ஆரம்பித்தது முதல் தற்போதுள்ள மூன்றாம் அலைவரையான காலப்பகுதியில் 2,404 கர்ப்பிணி தாய்மார் கொவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். இவர்களில் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொவிட் தொற்றுக்குள்ளான மொத்த கர்ப்பிணிகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும் போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகக் காணப்பட்டாலும், இந்த அனைத்து மரணங்களும் மூன்றாம் அலையில் பதிவானவை என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விடயமாகும்.
இதே போன்று இரண்டாம் அலைக்கு பின்னர் இதுவரையில் 5 வயதுக்கு குறைவான 13 குழந்தைகள் கொவிட் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
இவ்வாறு கொவிட் தொற்றால் உயிரிழந்த கர்ப்பிணிகளில் பெருமளவானோர் உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய், சிறுநீரக நோய் உள்ளிட்ட ஏதேனுமொரு நாட்பட்ட நோயால் பாதிக்கப்பட்டவர்களாகவே உள்ளனர். இந்த நாட்பட்ட நோயுடன் கொவிட் தொற்றுக்கும் உள்ளானமையால் ஏற்பட்ட சிக்கல் நிலைமையே இவர்களது மரணத்திற்கான காரணியாகும் என்றார்.
No comments:
Post a Comment