காபூல் விமான நிலைய தற்கொலை குண்டுத் தாக்குதல் : 13 அமெரிக்க படையினர் உள்ளிட்ட 73 பேர் பலி, 140 பேர் காயம் : ஐ.எஸ்.ஐ.எஸ். பொறுப்பேற்றது ! - News View

Breaking

Friday, August 27, 2021

காபூல் விமான நிலைய தற்கொலை குண்டுத் தாக்குதல் : 13 அமெரிக்க படையினர் உள்ளிட்ட 73 பேர் பலி, 140 பேர் காயம் : ஐ.எஸ்.ஐ.எஸ். பொறுப்பேற்றது !

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நேற்று இடம்பெற்ற இரு தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 73 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த தாக்குதல் நடந்தவுடன் 40 பேர் பலியானதாகவும், 120 பேர் காயம் அடைந்ததாகவும் தகவல்கள் வெளியாயின. இந்த நிலையில் பலி எண்ணிக்கை மேலும் உயர்ந்துள்ளதாக தகவல் வந்துள்ளது.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள ஹமிட் ஹர்சாய் விமான நிலையத்திற்கு வெளியே நேற்று (26) இரவு அடுத்தடுத்து இரு தற்கொலைக் குண்டுத்தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த குண்டுத் தாக்குதல்களுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை 73 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில்  சிறுவர்கள் மற்றும் 13 பேர் காபூல் விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த அமெரிக்க கடற்படையின் வீரர்கள் ஆவர். இந்த தாக்குதலில்  140 பேர் காயமடைந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றி உள்ளனர். இதையடுத்து அங்கிருந்து வெளிநாட்டினர் அதிகளவில் வெளியேறி வருகின்றனர்.

அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், இந்தியா உள்ளிட்ட நாடுகள் தங்களது குடிமக்களை வெளியேற்ற நடவடிக்கை மேற்கொண்டுள்ளன.

இதன் காரணமாக காபூலில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் தினமும் ஆயிரக்கணக்கானோர் குவிந்து வருகிறார்கள்.

குண்டு வெடிப்பு தாக்குதல் அமெரிக்க படையினரின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதியில் நடத்தப்பட்டுள்ளது.

குண்டு வெடிப்பில் குழந்தைகளும் பலியானதாக தலிபான் படையைச் சேர்ந்த ஒருவர் கூறினார். ஆனாலும் குண்டு வெடிப்பில் பலியானவர்கள் பற்றிய முழுமையான விவரம் உடனடியாக தெரியவில்லை.

No comments:

Post a Comment

Post Bottom Ad