இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கும், USAID நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் : நாடளாவிய ரீதியில் 45 ஆயிரம் மின்னியலாளர்களுக்கு இலவசமாக NVQ-3 தொழிற்தகைமையை வழங்க துரித திட்டம் - News View

About Us

About Us

Breaking

Saturday, July 3, 2021

இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கும், USAID நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் : நாடளாவிய ரீதியில் 45 ஆயிரம் மின்னியலாளர்களுக்கு இலவசமாக NVQ-3 தொழிற்தகைமையை வழங்க துரித திட்டம்

இளைஞர்களின் வேலையின்மை பிரச்சினையை சமாளிக்கும் நோக்கில் இளம் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில் இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கும் சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க முகவர் நிறுவனத்திற்கும் (USAID) இடையே புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.

45 ஆயிரம் மின்னியலாளர்களுக்கு தொழில்முறை தகுதியை பெற்றுக் கொடுக்கும் வகையில் USAID இன் இளைஞர் வேலை வாய்ப்பு மற்றும் தொழில் முனைவோர் திட்டமான You Lead உடன் 28 ஆம் திகதி இவ் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

மின்சாரத்துறையில் இலங்கை இளைஞர்களின் திறனை மேம்படுத்தவும் அவர்களை ஊக்குவிக்கும் வகையிலும் மின்சாரத்துறையின் ஒழுங்குறுத்துனர் என்ற வகையில் இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் இளைஞர்களுக்கு அதிகாரமளிக்கும் மிக பாரிய திட்டங்களில் இதுவும் ஒன்றாகும். இதன் மூலம் இளம் மின்னியலாளர்கள் எவ்வித செலவுமின்றி தொழில் முறை தகுதியை பெற்றுக் கொள்ள முடியும் என இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் திரு.ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.

மேலும் இத்திட்டத்தின் ஊடாக இளம் மின்னியலாளர்கள் மூன்றாம் நிலை தேசிய தொழில் தகைமை சான்றிதழை (NVQ-3) பெற்றுக் கொள்வதன் மூலம் உள்நாட்டிலும், சர்வதேச ரீதியிலும் தொழில் வாய்ப்புகளை பெறுவது மாத்திரமன்றி, சிறந்த தொழில் அங்கீகாரத்தை பெற முடியும் என்றும் திரு.ஜனக ரத்நாயக்க குறிப்பிட்டார்.

இலங்கையில் இளைஞர்கள் மத்தியில் தொழிற்கல்வியை ஊக்குவிப்பதே You Lead திட்டத்தின் நோக்கமாகும் என யூலீட் திட்டத்தின் கூட்டு பணிப்பாளர் விந்தியா சில்வா குறிப்பிட்டார்.

அனுபவம் வாய்ந்த மின்னியலாளர்களுக்கு தொழில்முறை தகுதியை வழங்கி மின்னியல் துறையை நிபுணத்துவம் மிக்க துறையாக மாற்றுவது மாத்திரமன்றி, தகுதி பெற்ற மின்னியலாளர்களை கொண்டு பாதுகாப்பான மின்சார நிறுவல்களை மேற்கொள்வதன் மூலம் வாழ்க்கையையும், சொத்துக்களையும் பாதுகாப்பதும் இதன் நோக்கமாகும் என விந்தியா சில்வா மேலும் தெரிவித்தார்.

இலங்கையில் சுமார் 45 ஆயிரம் மின்னியலாளர்கள் காணப்படுகின்றனர் என்றும் அவர்களில் 80 வீதமானோருக்கு அங்கீகரிக்கப்பட்ட தொழில்முறை தகுதி இல்லை என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது, இது அவர்களின் தொழில் முன்னேற்றத்திற்கு பாரியதொரு தடையாகும்.

அத்துடன் மின்னியலார்களுக்கான உரிமம் பெறுவதற்கான குறைந்தபட்ச தகுதியாக NVQ-3 நிர்ணயிக்கப்பட்டுள்ளதால் இதனை பெற்றுக் கொள்வது அத்தியவசியமாகும். ஆனால் தங்களது வருமானத்தை கருத்திற்கொண்டு பலர் பாரிய தொகையை முதலீடு செய்து நீண்ட கால கற்கை நெறிகளை மேற்கொள்ள தயக்கம் காட்டுகின்றனர். 

எனவே இப்பிரச்சினைக்கு தீர்வு காணும் முகமாக இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு, மூன்றாம் நிலை தொழிற்கல்வி ஆணைக்குழு மற்றும் தொழிற் பயிற்சி அதிகார சபையுடன் இணைந்து குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் எவ்வித கட்டணமும் இன்றி இலவசமாக மூன்றே தினங்களில் மின்னியலாளர்களுக்கு NVQ-3 சான்றிதழை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

யூலீட் என்பது இளைஞர்களின் தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வியை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட இலங்கையில் யுஎஸ்எயிட் நிதியுதவி அளிக்கும் ஒரு திட்டமாகும். இத்திட்டத்தினூடாக மாணவர்கள், ஆசிரியர்கள், நிறுவனங்கள் மற்றும் தொழில்முனைவோர் ஆகியோருக்கு ஒத்துழைப்பு நல்கி பலப்படுத்தும் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

யுஎஸ்எயிட் ஆனது 60 ஆண்டு காலங்களாக உலகளாவிய ரீதியில் அபிவிருத்தி மற்றும் மனிதாபிமான உதவிகளை நல்கி வருகின்றது. அத்துடன் இலங்கை மக்களின் நலனுக்காக 1956ஆம் ஆண்டு முதல் 350 பில்லியன் ரூபாய்க்கும் அதிகமான தொகையை முதலீடு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment