ஐக்கிய தேசிய கட்சியின் அழைப்பு வேடிக்கையானது, அசுத்தங்களை நீக்கி சுத்தமாகிய பின்னர் எம்முடன் இணையுமாக இருந்தால் கதவுகள் திறக்கப்பட்டே இருக்கிறது : ரஞ்சித் மத்தும பண்டார - News View

About Us

About Us

Breaking

Monday, July 5, 2021

ஐக்கிய தேசிய கட்சியின் அழைப்பு வேடிக்கையானது, அசுத்தங்களை நீக்கி சுத்தமாகிய பின்னர் எம்முடன் இணையுமாக இருந்தால் கதவுகள் திறக்கப்பட்டே இருக்கிறது : ரஞ்சித் மத்தும பண்டார

(எம்.மனோசித்ரா)

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதசவை ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து செயற்படுமாறு அதன் பொதுச் செயலாளர் அழைப்பு விடுத்துள்ளமை வேடிக்கையாகும். ஐக்கிய தேசியக் கட்சி அதன் அசுத்தங்களை நீக்கி சுத்தமாகிய பின்னர் எம்முடன் இணையுமாக இருந்தால் அதற்காக கதவுகள் திறக்கப்பட்டே இருக்கிறது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டாரவினால் நாட்டை கட்டியெழுப்ப இணைந்து செயற்பட ஒன்றிணையுமாறு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இது தொடர்பில் ரஞ்சித் மத்தும பண்டாரவினால் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கு ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணையுமாறு அக்கட்சியின் செயலாளரால் அழைப்பு விடுக்கப்பட்டது. இது உண்மையான செய்தி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு உறுப்பினர்களின் இணக்கத்தோடு ஐக்கிய மக்கள் சக்தி ஆரம்பிக்கப்பட்டது என்பது அதன் உறுப்பினர்களுக்கு தற்போது மறந்து போயுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் எங்கே இருக்கிறார்கள் என்பதை கடந்த தேர்தல் நிரூபித்துக் காட்டியுள்ளது. அது எழுமாறாக நடந்தது அல்ல.

ஐக்கிய தேசியக் கட்சி வீழ்ச்சியடைந்து செல்வதற்கு காரணம் என்ன என்பது குறித்து சுய விசாரணை செய்து கொள்வது அந்தக் கட்சிக்கு உள்ள ஒரே தீர்வு என்பதோடு எமது அரசாங்கம் வீழ்ச்சியடைவதற்கு முக்கிய காரணமான மத்திய வங்கி பிணை முறி மோசடிக்காரர்களை பாதுகாப்பது மற்றும் அரசாங்கத்துடன் இரகசிய ஒப்பந்தங்களை மேற்கொண்டு தந்திரமாக மேற்கொள்ளும் நடவடிக்கைகளை மக்கள் ஆதரிப்பார்களாக என்று பரிசீலனை செய்து பார்க்க வேண்டும்.

மக்களால் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரிதிநிதிகளை நீக்கியது மக்களுடைய ஜனநாயத்தின் உயிர் நாடிக்கு கொடுக்கப்பட்ட தாக்குதல் என்பதோடு மக்கள் பிரிதிநிதிகளை பிணையாக வைத்துக் கொண்டுள்ள கட்சி இவ்வாறான கோரிக்கையை வைப்பது கேலியாக உள்ளது.

ஆரம்பகால ஐக்கிய தேசியக் கட்சியின் பெறுமதி மற்றும் முன்னுதாரண செயற்பாடுகளை ஐக்கிய மக்கள் சக்தி தற்போது முன்னெடுத்து வருகின்றது. அத்தோடு சகல இனங்களையும் உள்ளடக்கி ஒரு புதிய பயணத்தை ஆரம்பித்திருக்கின்றது. 

ஐக்கிய தேசியக் கட்சியின் அசுத்தங்களை நீக்கி சுத்தமாகிய பின்னர் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணையுமாக இருந்தால் அதற்காக கதவுகள் திறக்கட்டிருக்கின்றது. இல்லை ஐக்கிய தேசியக் கட்சி அதே பாதையில் பயணிக்கும் என்றிருந்தால் அதற்காக கவலைப்படுவதே அல்லாமல் வேறு மாற்றீடு ஒன்றும் இல்லை என்றார்.

No comments:

Post a Comment