வட மாகாண வீட்டுத் திட்டத்திற்கான மிகுதி நிதி எப்போது விடுவிக்கப்படும் - தரவுகளுடன் சபையில் கேள்வி எழுப்பினார் ஸ்ரீதரன் - News View

Breaking

Post Top Ad

Friday, July 9, 2021

வட மாகாண வீட்டுத் திட்டத்திற்கான மிகுதி நிதி எப்போது விடுவிக்கப்படும் - தரவுகளுடன் சபையில் கேள்வி எழுப்பினார் ஸ்ரீதரன்

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

வடக்கு மாகாணத்தில் 4,082 மாதிரி கிராமங்களில் 19 ஆயிரத்து 2,22 குடும்பங்களை கொண்ட வீட்டுத்திட்டம் உருவாக்கப்பட ஒதுக்கிய 11 ஆயிரத்து 203.909 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்ட நிலையில், 3,655 மில்லியன் ரூபாவே விடுவிக்கப்பட்டுள்ளது. மிகுதி 7548.058 மில்லியன் ரூபா எப்போது விடுவிக்கப்படும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு சபையில் கேள்வி எழுப்பியது.

பாராளுமன்றத்தில் நேற்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஸ்ரீதரன் எம்.பியினால் கொண்டுவரப்பட்ட சபை ஒத்திவைப்பு பிரேரணையில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், வடக்கு கிழக்கு மாகாணங்களில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, பொருளாதார ரீதியில் நலிவுற்ற மக்களுக்கு கடந்த 2018,2019 ஆம் ஆண்டுகளில் தேசிய வீடமைப்பு அதிகார சபை ஊடாக வழங்கப்பட்ட வீட்டுத் திட்டங்களுக்கான நிதி முழுமையாக விடுவிக்கப்படாத காரணத்தினால் அக்குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக மாதிரி கிராமங்கள், வெள்ளப் பெருக்கு காரணமாக பாதிக்கப்பட்ட வீடுகள், கடனும் கடன் மானியங்களில் வழங்கப்பட்ட வீட்டுத்திட்டம், இந்திய உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட வீட்டுத்திட்டம் என்பன முன்னெடுக்கப்பட்டது.

இதில் யாழ்பாணத்தில் 1,36 மாதிரி கிராமங்கள் 3,772 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது. இதற்காக 2146.8 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டபோதும், 969.72 மில்லியன் ரூபாவே விடுவிக்கப்பட்டுள்ளது. ஆகவே 1177.08 மில்லியன் ரூபா யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கு விடுவிக்கப்படவேண்டியுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில் 92 மாதிரி கிராமங்களில் 4,954 குடும்பங்களுக்கான வீடுகள் அமைக்க 2727.11 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டது. இவற்றில் 8,14 மில்லியன் ரூபாவே ஒதுக்கப்பட்டுள்ளது. ஆகவே 1912.74 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட வேண்டியுள்ளது.

மன்னார் மாவட்டத்தில் 1,26 மாதிரி கிராமங்களுகாக 3,373 குடும்பங்களுக்கு வீடுகளை அமைக்க 2148.6 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டது. ஆனால் இதில் 575.25 மில்லியன் ரூபாவே ஒதுக்கப்பட்டது. ஆகவே 1,573 மில்லியன் ரூபா ஒதுக்க வேண்டியுள்ளது.

வவுனியா மாவட்டத்தில் 125 மாதிரி கிராமங்களை அமைத்து 3,627 குடும்பங்களுக்கு வீடுகளை அமைத்துக் கொடுக்க, 1956.32 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் இதில் 663.32 மில்லியன் ரூபாவே விடுவிக்கப்பட்டுள்ளது, ஏனைய 1,292 மில்லியன் ரூபா ஒதுக்க வேண்டியுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் 3,501 குடும்பங்களுக்கான 2,225 மில்லியன் ஒதுக்கப்பட்ட நிலையில், 6,63 மில்லியன் ரூபா மட்டுமே விடுவிக்கப்பட்டுள்ளது, ஏனைய 1,592 மில்லியன் ரூபா எஞ்சிய தொகை வழங்கப்படவேண்டும்.

ஆகவே மொத்தமாக வடக்கு மாகாணத்தில் 4,082 மாதிரி கிராமங்களில் 19 ஆயிரத்து 2,22 குடும்பங்களை கொண்ட வீட்டுத்திட்டம் வழங்கப்பட்டது. இதற்காக 11 ஆயிரத்து 203.909 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்ட நிலையில் 3655 மில்லியன் ரூபாவே விடுவிக்கப்பட்டுள்ளது. மிகுதி 7548.058 மில்லியன் ரூபா விடுவிக்கப்படாது தடுத்து வைக்கப்பட்டுள்ளது.

எனவே மக்கள் ஒரு நிரந்தர வீட்டை அமைக்க எல்லாவற்றையும் இழந்து நிற்கும் எமது மக்களுக்கு மீள வீட்டுத்திட்டத்தை உருவாக்க நிதியை விடுவிக்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad