நாட்டின் அனைத்துத் துறைகளிலும் தோல்வியடைந்திருக்கும் அரசாங்கம், அதனை மறைப்பதற்காகவே மக்களின் கருத்துச் சுதந்திரத்தையும் எதிர்ப்பை வெளிக்காட்டுவதற்கான உரிமையையும் பறிக்கின்றது - மயந்த திஸாநாயக்க - News View

Breaking

Post Top Ad

Friday, July 9, 2021

நாட்டின் அனைத்துத் துறைகளிலும் தோல்வியடைந்திருக்கும் அரசாங்கம், அதனை மறைப்பதற்காகவே மக்களின் கருத்துச் சுதந்திரத்தையும் எதிர்ப்பை வெளிக்காட்டுவதற்கான உரிமையையும் பறிக்கின்றது - மயந்த திஸாநாயக்க

(நா.தனுஜா)

நாட்டின் அனைத்துத் துறைகளிலும் தோல்வியடைந்திருக்கும் அரசாங்கம், அதனை மறைப்பதற்காகவே மக்களின் கருத்துச் சுதந்திரத்தையும் எதிர்ப்பை வெளிக்காட்டுவதற்கான உரிமையையும் பறிப்பதற்கு நடவடிக்கை எடுத்திருக்கின்றது. அதன் மூலம் மக்களின் கோரிக்கைகளைப் புறந்தள்ளிவிட முடியும் என்று அரசாங்கம் நினைத்தால், அது முற்றிலும் தவறான கணிப்பாகும். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பொதுமக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக அவர்களுடன் ஒன்றிணைந்து செயற்படுவதற்கு நாம் தயாராக இருக்கின்றோம் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைக் காரியாலயத்தில் நேற்று வியாழக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது, நாட்டின் அனைத்துத் துறைகளிலும் அரசாங்கம் தோல்வியடைந்திருக்கும் நிலையில், அதனை மறைப்பதற்காகவே மக்களின் கருத்துச் சுதந்திரத்தையும் எதிர்ப்பை வெளிக்காட்டுவதற்கான உரிமையையும் பறிப்பதற்கு நடவடிக்கை எடுத்திருக்கின்றது.

பொதுமக்கள், சுகாதாரத்துறை ஊழியர்கள், அரச அதிகாரிகள் உள்ளடங்கலாக அனைத்துத் தரப்பினரும் அரசாங்கத்திற்கு எதிராகப் போராட்டங்களை முன்னெடுத்திருக்கும் நிலையில், பொலிஸார் ஊடாக அவற்றைக் கட்டுப்படுத்தி பொலிஸ் இராஜ்ஜியமொன்றை உருவாக்குவதற்கு அரசாங்கம் முயற்சித்து வருகின்றது.

அரசியலமைப்பின் ஊடாக நாட்டு மக்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் வகையிலான செயற்பாடுகளே அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படுகின்றன. அவற்றை நாம் கடுமையாகக் கண்டனம் செய்கின்றோம்.

ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதற்குத் தடை விதிக்கப்பட்டதன் பின்னர், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட அரசியல் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்ட போதிலும் நீதிமன்றம் அவர்களின் சிவில் உரிமைகளுக்கு மதிப்பளித்து உடனடியாகப் பிணை வழங்கி விடுதலை செய்தது.

எனினும் பிணையில் விடுவிக்கப்பட்டவர்களைத் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த வேண்டும் எனக்கூறி பொலிஸார் அவர்களை தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

எனவே பொலிஸார் அவர்களது கடமைகளை மாத்திரம் மேற்கொள்ள வேண்டும் என்றும் அரசாங்கத்தினால் பிறப்பிக்கப்படும் சட்டவிரோத கட்டளைகளை செயற்படுத்த வேண்டாம் என்றும் வலியுறுத்துகின்றோம்.

அடுத்ததாக நாட்டிலுள்ள ஊடகங்கள் மீது, குறிப்பாக 'சிரச' ஊடக நிறுவனத்தை முடக்குவதற்கு அரசாங்கம் முயற்சிப்பதாக எமது கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டியிருந்தார்.

ஜனநாயகத்தின் நான்காவது தூணாக விளங்கும் ஊடகங்களுக்கு அவசியமான பாதுகாப்பை வழங்குமாறு அரசாங்கத்தைக் கேட்டுக் கொள்கின்றோம். அதேவேளை நாட்டிலுள்ள அனைத்து ஊடகங்களினதும் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கு நாம் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம்.

அண்மைக் காலத்தில் உருவான 'ஜனாதிபதி தோல்வியடைந்து விட்டார்' என்ற கோஷம் நாம் உருவாக்கியதல்ல. அனைத்துத் துறைகளிலும் ஜனாதிபதி தோல்வியடைந்து விட்டார் என்பதை அடிமட்ட மக்கள் வரை நன்கு உணர்ந்து கொண்டமையினால் உருவானதே அந்தக் கோஷமாகும். இந்தத் தோல்வியை மறைத்துக் கொள்ளும் நோக்கிலேயே அரசாங்கம் தற்போது வேறு பாதையில் பயணித்துக் கொண்டிருக்கின்றது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது அடக்குமுறைகளைப் பிரயோகிப்பதன் ஊடாக மக்களின் கோரிக்கைகளைப் புறந்தள்ளிவிட முடியும் என்று அரசாங்கம் நினைத்தால், அது முற்றிலும் தவறான கணிப்பாகும். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பொதுமக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கான அவர்களுடன் ஒன்றிணைந்து செயற்படுவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தயாராக இருக்கின்றது.

கடந்த இரு வருட காலத்திற்குள் இலங்கையை விட்டு வெளிநாடுகளுக்குச் சென்று தொழில் புரிவதற்கும் வெளிநாடுகளில் வசிப்பதற்கும் விண்ணப்பித்திருப்பவர்களின் எண்ணிக்கை ஆறரை இலட்சத்தைக் கடந்துள்ளது. வரலாற்றிலேயே வெளிநாடுகளுக்குச் செல்வதற்கு கடந்த இரு வருட காலத்திலேயே அதிகளவானோர் விண்ணப்பித்திருக்கின்றனர் என்று சுட்டிக்காட்டினார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad