டுபாயில் உலகின் மிக ஆழமான நீச்சல் குளம் : திறந்து வைத்தார் பட்டத்து இளவரசர் : உறுதி செய்தது கின்னஸ் நிறுவனம் - News View

Breaking

Post Top Ad

Friday, July 9, 2021

டுபாயில் உலகின் மிக ஆழமான நீச்சல் குளம் : திறந்து வைத்தார் பட்டத்து இளவரசர் : உறுதி செய்தது கின்னஸ் நிறுவனம்

டுபாயில் உலகின் மிக ஆழமான நீச்சல் குளத்தை டுபாய் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் பின் முகம்மது பின் ரஷித் அல் மஹ்தூம் திறந்து வைத்து பார்வையிட்டார்.

ஆழமான நீச்சல் குளம்
டுபாயில் நாத் அல் செபா பகுதி அருகே மிக ஆழமான நீச்சல் குளம் கட்டமைக்கப்பட்டுள்ளது. டீப் டைவ் என்ற நிறுவனம் இந்த நீச்சல் குளத்தை அமைத்துள்ளது. 

இந்த நீச்சல் குளம் 197 அடி (60 மீட்டர்) ஆழம் கொண்டது ஆகும். இதில் தண்ணீரின் மொத்த கொள்ளளவு 1 கோடியே 40 இலட்சம் லீட்டர் ஆகும். அதாவது 6 ஒலிம்பிக் நீச்சல் குளத்தின் அளவாகும்.

இந்த ஆழமான நீச்சல் குளத்தில் ஹப்பர் பேரிக் பகுதி உள்ளது. இதில் ஒரு நகரம் தண்ணீரில் மூழ்கியது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி உள்ளனர். 

மேலும் பழைய பணிமனை போன்ற அமைப்பு பார்வையாளர்களை வெகுவாக கவர்வதாக உள்ளது. ஸ்கூபா டைவ் எனப்படும் நீர்மூழ்கி வீரர்கள் பயிற்சி பெறுவதற்கும் இதில், வசதி செய்து தரப்பட்டுள்ளது.

164 மின் விளக்குகள்
இந்த நீச்சல் குளமானது 20 அடி மற்றும் 69 அடி ஆழத்தில் 2 பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. தண்ணீருக்கடியில் 56 கண்காணிப்பு கமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. 

சூழ்நிலைக்கேற்ப வண்ணங்கள் மற்றும் ஒளி அளவை வெளிப்படுத்தும் 164 மின் விளக்குகள் ஆழமான பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் தண்ணீருக்கடியில் 100 பேர் பங்கு பெறும் நிகழ்ச்சிகளையும் நடத்த வசதி உள்ளது. 

மேலும் ஒவ்வொரு 6 மணி நேரத்திற்கும் நீச்சல் குளத்தில் உள்ள தண்ணீர் எரிமலை பாறைகள் வழியாக சுத்திகரிப்பு செய்யப்படுகிறது. இது நாசாவின் தொழில்நுட்பத்தில் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தகக்து.

நீச்சல் குள வளாகத்தில் பரிசுப் பொருட்கள் வாங்கும் கடை, நீச்சல் செய்வதற்கு உதவும் பொருட்களை விற்பனை செய்யும் கடை, கூட்ட அரங்கு உள்ளிட்டவை அமைந்துள்ளது. 80 பேர் அமர்ந்து சாப்பிடக்கூடிய வகையிலான உணவகம் அமைக்கும் பணியும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பட்டத்து இளவரசர் திறந்து வைத்தார்
10 வயதுக்கு மேற்பட்வர்கள் இந்த நீச்சல் குளத்தில் பயிற்சி பெற வசதி செய்து தரப்பட்டுள்ளது. இதற்காக இணையத்தளம் மூலம் பதிவு செய்துகொள்ள ஏற்பாடு செய்து தரப்பட்டுள்ளது. 

இந்த ஆழமான நீச்சல் குளத்தின் அளவை கிண்ணஸ் சாதனை நிறுவனம் உறுதி செய்துள்ளது. விரைவில் இதற்கான சான்றிதழ் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அமீரகத்தின் முத்து குளித்தல் பாரம்பரியத்தை நினைவு கூறும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த நீச்சல் குளத்தை நேற்று துபாய் பட்டத்து இளவரசர் மேதகு ஷேக் ஹம்தான் பின் முகம்மது பின் ரஷித் அல் மஹ்தூம் திறந்து வைத்து பார்வையிட்டார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad