கொழும்பிலுள்ள பெறுமதி வாய்ந்த காணிகளை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்வதற்கான நடவடிக்கைகளில் அரசாங்கம் : கியூபா, கொங்கோ, மொசாம்பிக் நாடுகளின் வரிசையில் இலங்கையும் சேரப்போகின்றது - அசோக அபேசிங்க - News View

About Us

About Us

Breaking

Monday, July 26, 2021

கொழும்பிலுள்ள பெறுமதி வாய்ந்த காணிகளை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்வதற்கான நடவடிக்கைகளில் அரசாங்கம் : கியூபா, கொங்கோ, மொசாம்பிக் நாடுகளின் வரிசையில் இலங்கையும் சேரப்போகின்றது - அசோக அபேசிங்க

(நா.தனுஜா)

வெளிவிவகார அமைச்சு அமைந்துள்ள இடம், ஹில்டன் ஹோட்டல், இலங்கை வங்கிக்குச் சொந்தமான இடம், விமானப் படைக்குச் சொந்தமான இடம் உள்ளடங்கலாக கொழும்பிலுள்ள பெறுமதி வாய்ந்த காணிகளை சஹஸ்ர மற்றும் செலெந்திவா நிறுவனங்களின் ஊடாக வெளிநாடுகளுக்கு விற்பனை செய்வதற்கான நடவடிக்கைகளில் அரசாங்கம் ஈடுபட்டிருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

அதுமாத்திரமன்றி அரசாங்கத்தின் மிக மோசமான பொருளாதாரக் கொள்கைகளின் காரணமாக உலகளாவிய ரீதியில் மோசமான பொருளாதாரத்தைக் கொண்டிருக்கும் நாடுகளாகப் பெயரிடப்பட்டிருக்கும் கியூபா, கொங்கோ மற்றும் மொசாம்பிக் ஆகிய நாடுகளின் வரிசையில் இலங்கையும் சேரப்போகின்றது என்று குறிப்பிட்டுள்ள அவர், நாடு வெகுவிரைவில் உணவுப் பொருட்கள், மருந்துப் பொருட்கள் மற்றும் எரி பொருட்களின் தட்டுப்பாட்டுக்கு முகங்கொடுக்கும் என்றும் எச்சரித்துள்ளார்.

கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைக் காரியாலயத்தில் இன்று திங்கட்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது, தற்போதைய அரசாங்கம் ஆட்சிபீடமேறி சுமார் ஒன்றரை ஆண்டுகள் நிறைவடைந்திருக்கின்றது. இருப்பினும் இந்த அரசாங்கத்தின் கொள்கை ரீதியான குறைபாடுகள் மற்றும் செயற்திறனற்ற நிர்வாகம் ஆகியவற்றின் காரணமாக நாட்டு மக்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

கடந்த காலத்தில் முன்னெடுக்கப்பட்டு வந்த கர்ப்பிணித் தாய்மாருக்கு போசணைப் பொதி வழங்கும் செயற்திட்டம் தற்போதைய அரசாங்கத்தினால் இடைநிறுத்தப்பட்டுள்ளது. அதனால் பிறக்கும் குழந்தைகள் மந்தபோசணை குறைபாட்டிற்கு உள்ளாகும் நிலையேற்பட்டுள்ளது.

மேலும் அரசாங்கத்தின் முறையற்ற பொருளாதார நிர்வாகத்தின் காரணமாக கடன் மீளச் செலுத்தும் இயலுமை, முதலீடு உள்ளிட்ட அனைத்துக் காரணிகளிலும் இலங்கை பின்னடைவைச் சந்தித்துள்ளது.

இந்நிலையில் உலகளாவிய ரீதியில் மிக மோசமான பொருளாதாரத்தைக் கொண்டுள்ள நாடுகளாகப் பெயரிடப்பட்டிருக்கும் கியூபா, கொங்கோ மற்றும் மொசாம்பிக் ஆகிய நாடுகளின் பட்டியலில் இலங்கையும் சேர்ந்து கொள்ளப் போகின்றது.

அத்தோடு கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில், தற்போது அரசாங்கம் பெறும் வருமானங்களையும் விட, அதன் செலவினங்கள் உயர்வாகக் காணப்படுகின்றன. இவற்றின் காரணமாக நாட்டின் பொருளாதாரம் தற்போது வங்குரோத்து நிலையை அடைந்துள்ளது.

No comments:

Post a Comment