ஜனாதிபதி கோத்தாபய, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி விசேட சந்திப்பு : உறுதியளித்துள்ள விடயங்கள் இவைதான்...! - News View

About Us

About Us

Breaking

Monday, July 26, 2021

ஜனாதிபதி கோத்தாபய, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி விசேட சந்திப்பு : உறுதியளித்துள்ள விடயங்கள் இவைதான்...!

(எம்.மனோசித்ரா)

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுக்கும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று இன்று திங்கட்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. கடந்த 21 ஆம் திகதி இடம்பெறவிருந்த இந்த சந்திப்பு இன்றைய தினத்திற்கு பிற்போடப்பட்டது.

இன்றைய தினம் ஜனாதிபதியுடனான சந்திப்பிற்கு முன்னர், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தலைமையில் காலை 9 மணிக்கு கட்சி உறுப்பினர்களுக்கிடையில் கொழும்பு - 10 டார்லி வீதியில் அமைந்துள்ள சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் இடம்பெற்றது.

ஜனாதிபதியுடனான சந்திப்பின் போது தெரிவிக்கப்பட வேண்டிய காரணிகள் தொடர்பில் சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கிடையில் கலந்துரையாடப்பட்டது.

அதனையடுத்து காலை 11 மணிக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான கலந்துரையாடல் ஆரம்பமானது.

ஒரு மணித்தியாலம் இடம்பெறுவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த இந்த கலந்துரையாடல் இரண்டரை மணித்தியாலங்கள் நீண்டது.

இதன்போது அரசாங்கத்தின் பெரும்பாலான செயற்பாடுகளில் சுதந்திரக் கட்சி புறக்கணிக்கப்படுகின்றமை தொடர்பில் ஜனாதிபதியிடம் அழுத்தமாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இது தவிர புதிய அரசியலமைப்பு உருவாக்கம், தேர்தல் முறைமையில் மாற்றங்கள் , ஆசிரியர்களின் சம்பள பிரச்சினைக்கான தீர்வு, உரப் பிரச்சினை, சுதந்திரக் கட்சியின் பிரதேச சபை உறுப்பினர்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் விரிவாக அவதானம் செலுத்தப்பட்டது.

சந்திப்பின் போது சுதந்திரக் கட்சியினர் முன்வைத்த கோரிக்கைகளுக்கு முக்கியத்துவமளித்த ஜனாதிபதி அவற்றுக்கு இணக்கம் தெரிவித்ததாக சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்தோடு நாடு பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ள நிலையில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் செயற்திட்டங்களை சீர்குழைக்கும் ஒரு தரப்பாக சுதந்திர கட்சி எப்போதும் காணப்படாது என்று சுதந்திரக் கட்சி ஜனாதிபதியிடம் உறுதியளித்துள்ளது.

No comments:

Post a Comment