தனது மகளின் பிரேத பரிசோதனை அறிக்கையில் பாரிய சந்தேகம் : முறையாக உணவு வழங்காது, இருட்டு அறையில் தங்க வைக்கப்பட்டதாக தாயார் தெரிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Monday, July 26, 2021

தனது மகளின் பிரேத பரிசோதனை அறிக்கையில் பாரிய சந்தேகம் : முறையாக உணவு வழங்காது, இருட்டு அறையில் தங்க வைக்கப்பட்டதாக தாயார் தெரிவிப்பு

(எம்.மனோசித்ரா)

தனது மகளின் பிரேத பரிசோதனை அறிக்கையில் பாரிய சந்தேகம் நிலவுவதாகவும், மீண்டும் பிரேத பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனினுடைய இல்லத்தில் பணிக்கமர்த்தப்பட்டு தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் உயிரிழந்த சிறுமியின் தாய் ஆர்.ரஞ்சனி தெரிவித்தார்.

பிரேத பரிசோதனை அறிக்கையில் ஹிஷாலினி தனக்குத்தானே தீ மூட்டிக் கொண்டதாக குறிப்பிடப்பட்டிருப்பதாக தெரிவித்த ஆர்.ரஞ்சனி, தனது மகள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற போது அசைவும் இன்றியே காணப்பட்டார். கண்களைக் கூட திறக்கவில்லை. வாய்ப்பகுதியில் பட்டியொன்று கட்டப்பட்டிருந்தது. அவ்வாறிருக்கையில் அவர் எவ்வாறு 'நான்தான் தீமூட்டிக் கொண்டேன்' என்று கூறியிருப்பார் என்றும் கேள்வியெழுப்பினார்.

சிறுமியின் தாய் ஆர்.ரஞ்சனி மற்றும் தந்தை ஜூட்குமார் ஆகியோர் இன்று திங்கட்கிழமை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடளித்தனர். அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில், மகள் பணி புரிந்த வீட்டுக்குச் சென்று பார்த்த போது அங்கு ஒரு முஸ்லிம் பொலிஸ் அதிகாரியே காணப்பட்டார். அதே போன்று மகளின் பிரேத பரிசோதனை அறிக்கையும் முஸ்லிம் வைத்தியர் ஒருவராலேயே வழங்கப்பட்டுள்ளது. அதில் என்னுடைய மகள் 'நான்தான் தீமூட்டிக் கொண்டேன்' என்று கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் எமக்கு பாரிய சந்தேகம் நிலவுகிறது. எனவே மீண்டும் பிரேத பரிசோதனை செய்யப்பட வேண்டும் என்று நான் உரிய அதிகாரிகளிடம் கேட்டுக் கொள்கின்றேன் என்றார்.

மேலும், எனது மகள் பணி புரிந்த வீட்டில் அவர் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு முறையாக உணவு கூட வழங்கப்பட்டிருக்கவில்லை என்பதோடு அவர் மின் விளக்கு அற்ற இருட்டு அறையிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளார். இருட்டில் தனித்திருக்க எனது மகள் மிகவும் அச்சப்படுவார். நான் சென்று அந்த அறையைப் பார்த்தேன். குறைந்தபட்சம் நாயொன்றுக்குகூட அந்த அறையில் இருக்க முடியாது. அவ்வாறானதொரு அறையையே அவர்கள் வழங்கியிருக்கிறார்கள். சமையலறைக்கு வெளிப்புறத்திலேயே அந்த அறை அமைந்துள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருடைய வீடு என்பதால் எனது மகள் பாதுகாப்பாக இருப்பார் என்றே நாம் நம்பினோம். ஆனால் எமது நம்பிக்கை பொய்யாகியுள்ளது. தற்போது என்னுடைய மகள் என்னுடனுமில்லை. உலகிலுமில்லை. அவரது மரணத்திற்கான நீதி நிலைநாட்டப்பட வேண்டும். தவறிழைத்தவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று அரசாங்கத்திடம் கோருகின்றேன் என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment