பைசர் தடுப்பூசிகளை மன்னார், வவுனியா மீனவர்களுக்கும், வெளிநாடு செல்ல உள்ளோருக்கும் வழங்க தீர்மானம் - News View

Breaking

Monday, July 26, 2021

பைசர் தடுப்பூசிகளை மன்னார், வவுனியா மீனவர்களுக்கும், வெளிநாடு செல்ல உள்ளோருக்கும் வழங்க தீர்மானம்

எம்.மனோசித்ரா

இலங்கைக்கு நான்காவது கட்டமாக 90 000 பைசர் தடுப்பூசிகள் இன்று திங்கட்கிழமை நாட்டை வந்தடைந்தன.

இம்முறைப் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ள இந்த தடுப்பூசித் தொகையை தொழில் நிமித்தம் வெளிநாடு செல்ல எதிர்பார்த்துள்ள 8000 பேருக்கும், உயர் கல்விக்காக வெளிநாடு செல்லவுள்ள மாணவர்களுக்கும் மற்றும் மன்னார், வவுனியா மாவட்டங்களிலுள்ள மீனவ சமூகத்திற்கும் வழங்கவுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

கடந்த மே மாதம் பைசர் தடுப்பூசிகளை அவசர பயன்பாட்டுக்கு உபயோகிப்பதற்கு இலங்கை மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் அனுமதி வழங்கியது.

முதற்கட்டமாக 26000 பைசர் தடுப்பூசிகள் இம்மாதம் 5 ஆம் திகதியும், இரண்டாம் கட்டமாக 26000 பைசர் தடுப்பூசிகள் இம்மாதம் 12 ஆம் திகதியும், மூன்றாம் கட்டமாக 70 200 பைசர் தடுப்பூசிகள் இம்மாதம் 19 ஆம் திகதியும் பெற்றுக் கொள்ளப்பட்டன.

அஸ்ட்ரசெனிகா தடுப்பூசிகளைப் முதற்கட்டமாக பெற்றுக் கொண்டவர்களுக்கு இரண்டாம் கட்டமாக பைசர் தடுப்பூசிகளை வழங்க தீர்மானித்துள்ளதாக ஆரம்பத்தில் அரசாங்கம் அறிவித்திருந்த போதிலும், பின்னர் அந்த தீர்மானம் கைவிடப்பட்டது. 

நாட்டில் இதுவரையில் 113967 பேருக்கு பைசர் தடுப்பூசிகள் முற்கட்டமாக வழங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை மேலும் 1.6 மில்லியன் சைனோபார்ம் தடுப்பூசிகள் நாட்டை வந்தடையவுள்ளன. 

இலங்கையில் இதுவரையில் 5565424 பேருக்கு சைனோபார்ம் தடுப்பூசிகள் முதற்கட்டமாகவும், 1406224 பேருக்கும் இரண்டாம் கட்டமாகவும் வழங்கப்பட்டுள்ளன. 

நாட்டில் சைனோபார்ம் தடுப்பூசிகளே அதிகளவானோருக்கு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment