(எம்.மனோசித்ரா)
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்திலுள்ள அமைச்சர்கள் வெறும் இறப்பர் முத்திரைகளாகவே உள்ளனர். இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகரவே இதனைத் தெரிவித்துள்ளார். அவ்வாறெனில் இந்த ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு எதிராக எம்முடன் இணையுமாறு அவருக்கு அழைப்பு விடுப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், அமைச்சர்கள் வெறும் இறப்பர் முத்திரைகளாகவே உள்ளனர் என்று இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். அவ்வாறெனில் எதற்காக மீண்டும் மீண்டும் அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கின்றனர்? ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட ராஜபக்ஷாக்களை எதிர்ப்பதற்கான தைரியம் இன்மையே இதற்கான காரணமாகும்.
இந்து சமுத்திரத்தின் முத்து என வர்ணிக்கப்பட்ட இலங்கையை ராஜபக்ஷாக்கள் சீரழித்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலைமையை மாற்றியமைப்பதற்கு பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக நாம் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றோம்.
எனவே தைரியமாக எம்முடன் இணைந்து அரசாங்கத்தை எதிர்க்குமாறு தயாசிறி ஜயசேகர உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கின்றோம்.
தேர்தல்களின் போது மகா சங்கத்தினர் தற்போதைய ஆட்சியாளர்களுக்கு பெரும் ஆதரவை வழங்கி அவர்களை வெற்றியடைய செய்தனர். எனவே தற்போது இவ்வாறு சீரழிந்துள்ளமைக்கு அவர்களும் பொறுப்பு கூற வேண்டும் என்பதையும் நினைவுபடுத்திக்கொள்கின்றோம் என்றார்.
No comments:
Post a Comment