சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு அரசியலமைப்பிற்கு அப்பாற்பட்ட வகையிலான சட்டங்களை விதிப்பதற்கு அதிகாரம் இல்லை : ஐக்கிய தேசியக் கட்சி - News View

Breaking

Post Top Ad

Saturday, July 10, 2021

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு அரசியலமைப்பிற்கு அப்பாற்பட்ட வகையிலான சட்டங்களை விதிப்பதற்கு அதிகாரம் இல்லை : ஐக்கிய தேசியக் கட்சி

(நா.தனுஜா)

தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் புதிய கட்டுப்பாடுகளை விதிக்கும் அதிகாரம் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு உள்ளது. இருப்பினும் நாட்டின் அரசியலமைப்பிற்கு அப்பாற்பட்ட வகையிலான சட்டங்களை விதிப்பதற்கு அவருக்கு அதிகாரம் இல்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டின் சட்டத்தை மீறிச் செயற்படுவதற்கான அதிகாரம் எந்தவொரு நபருக்கும் இல்லை. தற்போதைய சுகாதார நெருக்கடி நிலைமையின் கீழ் பொதுமக்களின் நலனைக் கருத்திற் கொண்டு தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் புதிய கட்டுப்பாடுகளை விதிக்கும் அதிகாரம் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு உள்ளது. 

இருப்பினும் நாட்டின் அரசியலமைப்பிற்கு அப்பாற்பட்ட வகையிலான சட்டங்களை விதிப்பதற்கோ அல்லது தற்போது நடைமுறையிலிருக்கும் சட்டங்களில் பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலான கட்டுப்பாடுகளை விதிப்பதற்கோ அவருக்கு அதிகாரம் இல்லை.

இருப்பினும் அண்மையில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் கடிதத்தை அடிப்படையாகக் கொண்டு பொலிஸாரால் வெளியிடப்பட்ட பணிப்புரையானது அரசியலமைப்பின் ஊடாக நாட்டு மக்களுக்கு வழங்கப்பட்ட கருத்துச் சுதந்திரத்தைப் பறிப்பதாகவே அமைந்துள்ளது. 

அந்தப் பணிப்புரையைப் பயன்படுத்தி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபவர்களைப் பொலிஸார் கைது செய்யும் நிலையொன்று உருவாகியிருக்கிறது. தனிமைப்படுத்தல் சட்டத்தின்படி மிகவும் நெருக்கமான தொடர்புகளைப் பேணிவர்களை மாத்திரமே தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

இருப்பினும் அண்மையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொண்டவர்களின் கொரோனா வைரஸ் தொற்றாளர்களோ அல்லது அவர்கள் போராட்டத்தின்போது நெருக்கமாகச் செயற்பட்டமையோ கண்டறியப்படவில்லை. 

அவ்வாறிருக்கையிலேயே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட குழுவினரைத் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துவதற்குப் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இவ்வாறு செயற்படும் பொலிஸார் தயானந்த லியனகேவின் வழக்கை நினைவில் கொள்ள வேண்டும். அவ்வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பின்படி, எந்தவொரு தரப்பினரால் எத்தகைய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டாலும் அது சட்டத்திற்கமைவானதா என்பதைப் பொலிஸார் மனதிலிருத்திச் செயற்பட வேண்டும் என்று நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad