ஜனநாயக விரோத செயற்பாட்டில் அரசாங்கம், விடுவிக்கும் வரை ஒன்லைன் வகுப்புக்களை புறக்கணிப்போம் : இலங்கை ஆசிரியர் சங்கம் - News View

Breaking

Post Top Ad

Thursday, July 15, 2021

ஜனநாயக விரோத செயற்பாட்டில் அரசாங்கம், விடுவிக்கும் வரை ஒன்லைன் வகுப்புக்களை புறக்கணிப்போம் : இலங்கை ஆசிரியர் சங்கம்

ஜனநாயக முறையிலான ஆர்பாட்டங்களை நசுக்கமுற்படுவதும், பெருந்தொற்றை காரணம் காட்டி தனிமைப்படுத்தலிற்கு உட்படுத்துவதும் ஜனநாயக விரோத செயற்பாடென இலங்கை ஆசிரியர் சங்கத்தின் வவுனியா கிளை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அவர்கள் அனுப்பியுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கொத்தலாவல இராணுவ பல்கலைகழக சட்ட மூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற சுற்று வட்டத்திற்கு அருகே இடம்பெற்ற கல்விசார் ஊழியர்களின் போராட்டத்தில் பங்கேற்ற இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் உட்பட பலர் கைது செய்யப்பட்டு அன்றையதினமே நீதிமன்றால் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.

எனினும் தனிமைப்படுத்தல் சட்டத்தினை காரணம் காட்டி தன்னிச்சையான முறையில் ஜோசப் ஸ்ராளின் உட்பட குழுவினர் கட்டாயமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளமை மிகவும் பாரதூரமான ஜனநாயக மறுப்பு நடவடிக்கையாக அமைகின்றது. இச்செயற்பாட்டை வன்மையாக கண்டிப்பதுடன் அவர்களை விடுதலை செய்யுமாறு கோருகிறோம்.

இலங்கையின் அரசியலமைப்பு ஏற்றுக் கொண்டுள்ள தொழிற்சங்க உரிமைகளின் அடிப்படையிலேயே ஆர்பாட்டங்கள் நடைபெறுகின்றன. இவற்றை நசுக்கமுற்படுவதும், கொரோனா பெருந்தொற்றை காரணம் காட்டி, தனிமைப்படுத்தலிற்கு உட்படுத்துவதும், ஜனநாயக விரோத செயற்பாடாகவே அமைகின்றது.

நிர்வகாத்திற்கு இடையூறு இல்லாமல் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி சமூக நீதிக்காக இடம்பெற்ற இப்போராட்டத்தில் கலந்துகொண்ட ஜோசப் ஸ்ராலின் உட்பட குழுவினரை தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிப்பதோடு தொழிற்சங்கங்களின் ஜனநாயக ரீதியான நடவடிக்கைகளிற்கு அனுமதியளிக்க வேண்டும் என கோரி நிற்கின்றோம்.

அத்துடன் ஆசிரியர்களாகிய நாம் இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் அவர் விடுவிக்கப்படும் வரை மாணவர்களின் ஒன்லைன் வகுப்புக்களினை புறக்கணிப்போம் என்றுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad