எந்தவொரு அரசியல் கட்சிகளினதும், கூட்டுக்களினதும் கட்டமைப்புக்களை மாற்ற வேண்டிய அவசியமில்லை : பொதுத் தளத்தில் பணியாற்றவே அழைப்பு என்கிறது ரெலோ - News View

Breaking

Post Top Ad

Sunday, July 11, 2021

எந்தவொரு அரசியல் கட்சிகளினதும், கூட்டுக்களினதும் கட்டமைப்புக்களை மாற்ற வேண்டிய அவசியமில்லை : பொதுத் தளத்தில் பணியாற்றவே அழைப்பு என்கிறது ரெலோ

(ஆர்.ராம்)

தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் பொதுத் தளமொன்றில் அனைத்து தமிழ்த் தேசியக் கட்சிகளும் இணைந்து பணியாற்றுவதையே இலக்காகக் கொண்டு ஒருங்கிணைக்கும் பணியை ரெலோ முன்னெடுத்துள்ளதே தவிர, எந்தவொரு அரசியல் கட்சிகளினதும், கூட்டுக்களினதும் கட்டமைப்புக்களை மாற்ற வேண்டிய அவசியமில்லை என்று ரெலோ தெரிவித்துள்ளது.

ரெலோவின் முயற்சியில், இலங்கைத் தமிழரசுக் கட்சி, புளொட், ரெலோ மற்றும் தமிழ் மக்கள் விடுதலைக் கூட்டணி ஆகிய தரப்புக்கள் பொதுத்தளத்தில் பணியாற்றுவது பற்றி பேச்சுக்களை முன்னெடுத்திருந்தது. இந்நிலையில் கொழும்பில் கூடிய தமிழரசுக் கட்சியின் அரசியல் பீடத்தில் இவ்விடயம் சம்பந்தமாக பலத்த விமர்சனங்களும், எதிர்மறையான நிலைப்பாடுகளும் பிரதிபலிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் கட்சிகளை ஒருங்கிணைக்கும் செயற்பாடுகளை முன்னெடுத்த ரெலோ அடுத்த கட்டமாக எவ்விதமான செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளது என்பது தொடர்பில் வினவியபோது அக்கட்சியின் ஊடகப் பேச்சாளர் சுரேந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ்த் தேசியத் தளத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் மக்களின் பிரச்சினைகள் விடயத்தில் ஒரே நிலைப்பாட்டினையே கொண்டிருக்கின்றன என்பது அத்தரப்புக்கள் பல்வேறு இடங்களில் வெளிப்படுத்தப்படும் கருத்துக்கள், செயற்பாடுகள் மூலமாக உணர்ந்து கொள்ளக் கூடியதாக உள்ளது.

அவ்வாறான நிலையில்தான் ரெலோ பொதுப் பிரச்சினைகள் தொடர்பில் பொதுத் தளமொன்றில் அனைத்துக் கட்சிகளும் இணைந்து செயற்படுவதென்றும் பிரதான விடயங்களான வடக்கு கிழக்கு இணைப்பு, இனப் பிரச்சினைத் தீர்வு உள்ளிட்ட விடயங்களில் இணக்கப்பாட்டை எட்டக்கூடிய விடயங்களில் இணைந்து செல்வதென்றும் கூட்டமைப்புக்கு வெளியில் உள்ள அரசியல் தரப்புக்களை ஒருங்கிணைக்கும் முயற்சிகளை முன்னெடுத்தது.

இந்தச் செயற்பாடானது புதிய கூட்டொன்றை முன்னெடுப்பது என்று கருதுவது தவறானதாகும். எந்தவொரு அரசியல் கட்சியும், கூட்டுக்களும் தமது கட்டமைப்புக்களை மாற்ற வேண்டியதில்லை. அக்கட்சிகளும், கூட்டுக்களும் இணைந்து செல்லக்கூடிய விடயங்களில் இணைந்து செயற்பட முடியும் என்ற புரிதல் முதலில் ஏற்பட வேண்டியது அவசியமாகின்றது.

குறிப்பாக, தமிழரசுக் கட்சி உட்பட அனைத்து கட்சிகளும் இந்த விடயத்தில் சந்தேகங்களின்றி சரியான புரிதலைக் கொள்ள வேண்டியது அவசியமாகின்றது. அதேநேரம், கடந்த காலத்தில் நடைபெற்ற திம்புப் பேச்சுவார்த்தையின்போது ஆயுத விடுதலை இயக்கங்களும், அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்தே பேச்சுக்களின் ஈடுபட்டன. திம்புக் கோட்பாட்டை உருவாக்கியிருந்தன.

அண்மைய காலங்களில் கூட கொள்கை அளவில் எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக அங்கீகரிப்பதை மறுதலித்திருந்த தரப்புக்கள் அவர் தலைமையில் நடைபெறும் அரச எதிர்ப்பு போராட்டங்களில் பங்கெடுத்துள்ளன.

ஆகவே, தற்போதைய நிலைமையில் தமிழ் மக்களின் விடயங்களை கையாள்வதற்கு வலுவானதொரு தரப்பாக தமிழ்த் தேசியத் தரப்புக்கள் இருக்க வேண்டும் என்பதே ரெலோவின் நிலைப்பாடே தவிரவும் அதற்கு அப்பால் எவ்விதமான தனிப்பட்ட அரசியல் நலன்களும் இல்லை என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad