தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள்ளேயே முதலில் ஒருங்கிணைந்து செயற்பட ஒருமித்த நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் : சுரேஷ் பிரேமச்சந்திரன் - News View

About Us

About Us

Breaking

Sunday, July 11, 2021

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள்ளேயே முதலில் ஒருங்கிணைந்து செயற்பட ஒருமித்த நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் : சுரேஷ் பிரேமச்சந்திரன்

(ஆர்.ராம்)

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் கட்சிகளுக்கிடையிலேயேதான் முதலில் ஒருங்கிணைந்து செயற்படுவது குறித்து ஒருமித்த நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். அதுவே ரெலோவின் முதற்கடமையாகவுள்ளதாக, மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

அவர் இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்காக ஒன்றிணைந்து செயற்படுவது தொடர்பில் எமக்கு எவ்விதமான பிரச்சினைகளும் கிடையாது. நாம் அவ்விதமான முயற்சிகளை முன்னெடுத்தும் இருக்கின்றோம்.

இன்று நேற்று அல்ல, விடுதலைப் போராட்டம் ஆரம்பித்த காலத்திலேயே அவ்விதமான முயற்சிகளை முன்னெடுத்திருந்தோம். அதேபோன்று இந்திய இலங்கை ஒப்பந்தத்தினை ஏற்றுக் கொண்டு செயற்படுத்த விளைந்தபோதும் கூட ஏனைய தரப்புக்களையும் அழைத்துச் செல்லவே விளைந்தோம்.

அவ்வாறான நிலையில் மிக அண்மையில் ஒன்பது கட்சிகளை ஒருங்கிணைத்து பொது வேலைத்திட்டமொன்றையும் முன்னெடுப்பதற்கு முயற்சிகளை எடுத்திருந்தோம். முதற்கட்டமாக, புதிய அரசியலமைப்புக்கான யோசனைகளை அனைத்து தமிழ்க் கட்சிகளும் இணைந்து வழங்குவது என்பது இலக்காக இருந்தது.

அதற்குரிய பேச்சுக்களும் முன்னெடுக்கப்பட்டபோதும், தமிழரசுக் கட்சி அதனை குழப்பியது. கூட்டமைப்பு தனியாக யோசனையை முன்வைத்தது. அதேநேரம், ரெலோவும் கட்சிகளின் ஒருங்கிணைவையும் விமர்சித்து, புதிய கூட்டு உருவாகுவதாக குறிப்பிட்டு அதற்கு எதிராக தீர்மானத்தினையும் நிறைவேற்றியது.

அவ்விதமான நிலையில் தற்போது ரெலோ ஏனைய கட்சிகளை ஒருங்கிணைக்கும் செயற்பாடுகளை முன்னெடுத்திருக்கின்றது. நாம், கடந்த கால விடயங்களை மறந்து அதில் பங்கேற்றிருந்தோம். ஆனால் தற்போது தமிழரசுக் கட்சியே மீண்டும் குழப்பும் வகையில் அதன் அரசியல் பீடத்தில் கருத்துக்களை வெளிப்படுத்தியிருப்பதாக தகவல்கள் வெளியாகின்றன.

ஆகவே, இந்த விடயத்தில் முதலில் ரெலோ தான் அங்கத்துவத்தினைக் கொண்டிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினுள் ஒருமித்த நிலைப்பாடொன்றை மேற்கொள்ள வேண்டும். தமிழ்த் தேசியத் தளத்தில் உள்ள கட்சிகளை ஒருங்கிணைப்பதற்கு ரெலோ இதயசுத்தியுடன் செயற்படுமாகவிருந்தால் கூட்டமைப்பில் அதற்குரிய நடவடிக்களை முன்னெடுப்பதே அதன் முதற்கடமையாகின்றது என்றார்.

No comments:

Post a Comment