(இராஜதுரை ஹஷான்)
இன்னும் இரண்டு மாத காலத்திற்குள் நாடு வழமை நிலைக்கு திரும்பும். பொருளாதார மட்டத்தில் ஏற்பட்டுள்ள சவால்களை சிறந்த முறையில் வெற்றி கொள்வோம். கூட்டணிக்குள் காணப்படும் உள்ளக பிரச்சினையை காரணம் காட்டி எதிர்தரப்பினர் அரசியல் இலாபம் தேடிக்கொள்ள முயற்சிக்கிறார்கள். அதற்கொருபோதும் இடமளிக்க முடியாது என பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் தேசிய பொருளாதாரம் ஒப்பீட்டளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனை அரசாங்கத்தின் நிர்வாக பலவீனம் என கருத முடியாது. கொவிட் தாக்கம் பலம் வாய்ந்த நாடுகளுக்குகூட பெரும் பாதிப்பை அனைத்து துறைகளிலும் ஏற்படுத்தியுள்ளது.
கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தும் திட்டங்களை அரசாங்கம் ஆரம்பத்தில் இருந்து பொறுப்புடன் முன்னெடுத்துள்ளது. கொவிட்-19 தடுப்பூசி செலுத்தும் பணிகள் வெற்றிகரமான முறையில் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
கொவிட்-19 தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை நாடு தழுவிய மட்டத்தில் முன்னெடுக்கப்படுகிறது. இதற்கு அரசாங்கம் முன்னுரிமை வழங்கியுள்ளது. இன்னும் இரண்டு மாத காலத்திற்குள் நாடு வழமை நிலைக்கு திரும்பும்.
பொருளாதார ரீதியில் ஏற்பட்டுள்ள சவால்களை அரசாங்கம் சிறந்த முறையில் வெற்றி கொள்ளும். தேசிய உற்பத்திகளை மேம்படுத்த பல செயற்திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. பொருளாதாரத்தை மேம்படுத்த அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு நாட்டு மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
நாட்டு மக்கள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் எரிபொருள் விலையை அதிகரித்தமைக்கு பொதுஜன பெரமுனவின் கட்சி என்ற ரீதியில் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தினோம். எரிபொருள் விலையேற்றத்திற்கு வலு சக்தி அமைச்சர் உதய கம்மன்பில பொறுப்பேற்க வேண்டும் என்றும் குறிப்பிட்டோம். கட்சி மட்டத்தில் இந்நிலைப்பாடு எடுக்கப்பட்டது.
இதனை அடிப்படையாகக் கொண்டு எதிர்கட்சியினர் வலு சக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்துள்ளார்கள். நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் கூட்டணியின் பங்காளி கட்சி தலைவர்களுடன் கலந்தாலோசித்து ஒரு தீர்மானத்தை எடுப்போம். கூட்டணிக்குள் பல உள்ளக பிரச்சினைகள் காணப்படுகின்றன. இதனை எதிர்தரப்பினர் சாதகமாக கொண்டு அரசியல் இலாபம் பெற இடமளிக்க முடியாது என்றார்.

No comments:
Post a Comment