(எம்.மனோசித்ரா)
ஐரோப்பிய ஒன்றியத்தின் வலியுறுத்தல்கள் எவையும் இலங்கையின் இறையான்மையை பாதிக்கும் விடயங்கள் அல்ல. மாறாக அரசாங்கமே போலியான பிரசாரங்களை முன்னெடுப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல குற்றம் சுமத்தியுள்ளார்.
பொருளாதார நெருக்கடிகளிலிருந்து மீள்வதற்கு ஒத்துழைப்பு பெற வேண்டுமாயின் சர்வதேச நாணய நிதியம் போன்றவைகளுடனான தொடர்புகளே சாத்தியப்படுமே தவிர சீனாவின் ஆதரவு பயனற்றதாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைக் கூறினார்.
இந்த அரசாங்கம் ஆட்சியைப் பொறுப்பேற்ற கடந்த ஒன்றறை ஆண்டுகளுக்குள் சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட அமைப்புக்களால் இலங்கைக்கு எதிராக பிரேரணைகள் சமர்பிக்கப்பட்டுள்ளன.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றில் இலங்கைக்கு எதிரான பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளதோடு, அமெரிக்காவின் காங்ரஸ் சபையில் இலங்கைக்கு எதிரான பிரேரணையொன்று தொடர்பில் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இவற்றிலிருந்து மீள்வதற்கு அரசாங்கம் சர்வதேசத்துடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க வேண்டியது அவசியமாகும் என்றும் கூறினார்.

No comments:
Post a Comment