மரணமடைவோர், தொற்றுக்குள்ளாவோர் தடுப்பூசி பெற்றுக் கொள்ளாதோரே ! அதிகரிக்கிறது டெல்டா ! ஏதாவவொரு தடுப்பூசியை கட்டாயம் பெற்றுக் கொள்ளுங்கள் - News View

Breaking

Monday, July 26, 2021

மரணமடைவோர், தொற்றுக்குள்ளாவோர் தடுப்பூசி பெற்றுக் கொள்ளாதோரே ! அதிகரிக்கிறது டெல்டா ! ஏதாவவொரு தடுப்பூசியை கட்டாயம் பெற்றுக் கொள்ளுங்கள்

(எம்.மனோசித்ரா)

நாட்டில் டெல்டா தொற்றுக்கு உள்ளானோர் எண்ணிக்கை 68 ஆக அதிகரித்துள்ளது. கடந்த ஒரு வாரமாக இனங்காணப்படும் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் கணிசமானளவு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதால், அதிகளவில் தொற்றாளர்கள் அனுமதிக்கப்படும் வைத்தியசாலைகளில் எவ்வகையான தொற்றாளர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள் என்பது தொடர்பில் பகுப்பாய்வு செய்வதற்கு தொற்று நோயியல் பிரிவின் அதிகாரிகள் குழு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை இனங்காணப்பட்ட டெல்டா தொற்றாளர்களில் பெருமளவானோர் கொழும்பு மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகளிலுள்ளவர்கள் என்பதோடு, பிலியந்தல மற்றும் இரத்மலானை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளிலிருந்தும் ஒவ்வொரு தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

அதற்கமைய நாட்டில் டெல்டா தொற்றாளர்களின் எண்ணிக்கை 68 ஆக உயர்வடைந்துள்ளது. இலங்கையில் தற்போது இனங்காணப்படும் டெல்டா வைரஸானது பிரித்தானியாவில் இனங்காணப்பட்ட வைரஸே ஆகும்.

தற்போது பெற்றுக் கொள்ளப்படும் சகல மாதிரிகளும் ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஆய்வு கூடத்திற்கு மரபணு பரிசோதனைகளுக்காக அனுப்பபடுகிறது. அங்கு பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு முடிவுகளை வெளியிடுவதற்கு சுமார் ஒன்றரை வாரம் செல்கிறது.

ஜூன் மாதத்தில் கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்படும் எண்ணிக்கையில் அதிகரிப்பினை அவதானிக்க முடிகிறது. மூன்றாம் அலையிலேயே இந்த அதிகரிப்பு அவதானிக்கப்பட்டுள்ளது. இவர்களில் அதிகளவானோர் ஒட்சிசன் தேவையுடையோராகவுள்ளனர். கடந்த இரு வாரங்களில் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் சிறிதளவு வீழ்ச்சி ஏற்பட்டு பின்னர் தற்போது மீண்டும் அதிகரித்துள்ளது.

கடந்த மூன்று வாரங்களில் பதிவான மரணங்கள் தொடர்பில் எம்மால் பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு பகுப்பாய்வு செய்ததன் மூலம் இதுவரையில் உயிரிழந்தவர்களில் பெருமளவானோர் தடுப்பூசி பெற்றுக் கொள்ளாதவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

அத்தோடு தொற்றாளர்களின் எண்ணிக்கையில் கடந்த வாரம் கணிசமானளவு அதிகரிப்பை அவதானித்த பின்னர், தொற்றாளர் எண்ணிக்கை அதிகரித்துள்ள வைத்தியசாலைகளுக்கு சுகாதார அமைச்சினால் தொற்று நோயியல் பிரிவின் அதிகாரிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். எவ்வாறான நோயாளர்கள் இவ்வாறு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பதை கண்டறிவதற்கான இந்த அதிகாரிகள் வைத்தியசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

அத்தோடு குறித்த நோயாளர்களில் தடுப்பூசி பெற்றுக் கொண்டுள்ளோர் தொடர்பான விபரங்களும் சேகரிக்கப்பட்டுள்ளன. அவர்களில் பெருமளவானோரும் தடுப்பூசி பெற்றுக் கொள்ளாதவர்களாவே உள்ளனர். இவர்களிடமிருந்தே ஏனையோருக்கும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் வைரஸ் பரவியுள்ளது.

அதே போன்று உயிரிழந்துள்ள முதியவர்களில் பெருமளவானோரும் தடுப்பூசி பெற்றுக் கொள்ளாதோராகவே உள்ளனர். எனவே எந்தவொரு தடுப்பூசியையாவது பெற்றுக் கொள்ளுமாறு மக்களை வலியுறுத்துகின்றோம். சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவினால் வழங்கப்படும் எந்தவொரு தடுப்பூசியையும் கட்டாயமாக பெற்றுக் கொள்ளுமாறும் வலியுறுத்துகின்றோம் என்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment