சிறுமி ஷாலினிக்கு நீதி கிடைக்க வேண்டும்! ஆனால், வீராப்பு வசனங்களைப் பேசி தமிழ், முஸ்லிம் எனும் தமிழ் பேசும் உறவை சீர்குலைக்க முயற்சிக்காதீர்கள் ! கலாநிதி வி. ஜனகன் - News View

About Us

About Us

Breaking

Thursday, July 29, 2021

சிறுமி ஷாலினிக்கு நீதி கிடைக்க வேண்டும்! ஆனால், வீராப்பு வசனங்களைப் பேசி தமிழ், முஸ்லிம் எனும் தமிழ் பேசும் உறவை சீர்குலைக்க முயற்சிக்காதீர்கள் ! கலாநிதி வி. ஜனகன்

எம்.எஸ்.எம்.ஸாகிர் & ரிஸ்க்கான் முஹம்மத் 

சிறுமி ஷாலினிக்கு நீதி கிடைக்க வேண்டும்! ஆனால், சமூக ஊடகங்களில் வீராப்பு வசனங்களை பேசி தமிழ்,முஸ்லிம் என்னும் தமிழ் பேசும் உறவை சீர்குலைக்க முயற்சிக்காதீர்கள் என ஜனனம் அறக்கட்டளையுடைய தலைவரும் சமூக செயற்பாட்டாளருமான கலாநிதி. வினாயகமூர்த்தி ஜனகன் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். 

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது, சிறுமி ஷாலினிக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதில் நூறுவீதம் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம். அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. அது அரசியல் கடந்த ஒரு நீதி சார்ந்த விடயம். அதற்காக வேண்டி என்னுடைய ஜனனம் அறக்கட்டளை ஊடாக சிறுமியின் குடும்பத்திற்கு நீதி கிடைக்க வேண்டுமான உதவிகளை ஜனநாயக அடிப்படையில் மேற்கொள்ளவும் தாங்கள் தயாராக உள்ளோம்.

ஆனால், தற்போது பார்க்கப் போனால் சமூக வலைதளங்களை திறந்தாலே இச்சிறுமியின் விவகாரத்தை வைத்து இரு தரப்பினரும் மாறி மாறி அரசியல் செய்வதை தெளிவாக காணக்கூடியதாக இருக்கின்றது.

இலங்கை திருநாட்டை பொருத்தமட்டில் மதங்களால் தமிழ், முஸ்லிம் என்று வேறுபட்டாலும் மொழியினால் தமிழ், முஸ்லிம் ஆகிய சமூகங்கள் ஒன்றாக பிணைந்திருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது.

இரு சமூகங்களுக்கிடையில் பாரிய தொப்புள்கொடி உறவு இருக்கிறது. இந்த விவகாரத்தை வைத்து சமூக ஊடகங்களில் தனிப்பட்ட காரணங்களுக்காக இதை அரசியல் மயமாக்கி தமிழ், முஸ்லிம் உறவை சீர்குலைக்க தயவுசெய்து முயற்சிக்க வேண்டாம் என்று சமூக ஊடகங்களில் வீராப்பு வசனம் பேசி கொள்பவர்களிடம் மிகப் பணிவாக வேண்டிக் கொள்ள விரும்புகிறேன்.

இந்தச் சிறுமியின் விவகாரமானது தமிழ், முஸ்லிம், சிங்களம் என்பதைத் தாண்டி அப்பாவி சிறுமிக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் நாங்களும் நீங்களும் குரல் கொடுக்க வேண்டுமே தவிர, தனிப்பட்ட அபிலாஷைகளுக்காகவும், அரசியல் நோக்கங்களுக்காகவும் உங்கள் குரல்களை சமூக ஊடகங்களில் எழுப்புவதை சற்று சிந்தித்துப் செயற்படுங்கள்.

இவ்வாறான ஒரு செயற்பாடு தொடர்ந்து சென்றால் தமிழ், முஸ்லிம் உறவுகளுக்கு இடையிலே அதிக விரிசலை ஏற்படுத்தும் என்ற சந்தேகம் ஒன்று என்னுள் தோன்றுகிறது.

இந்தச் சிறுமி மாத்திரமல்ல, இனிவரும் காலங்களில் எந்தச் சிறுமிக்கும் இவ்வாறான நிலை ஏற்படக் கூடாது என்பதற்காக, நாங்கள் இனம், மதம் கடந்து ஒன்று சேர வேண்டும் என்பதை உங்களிடம் கூறி கொள்ள விரும்புகிறேன்.

எதிர்காலத்தில் குறிப்பாக என்னுடைய ஜனனம் அறக்கட்டளையின் ஊடாக சிறுவர், சிறுமிகள் வேலைக்கு அமர்த்தப்படுவது தொடர்பிலான விழிப்புணர்வு செயற்றிட்டங்களை சமூக வலைத்தளங்கள் ஊடாகவும், நேரடியாகவும் மேற்கொள்ள இருக்கின்றோம்.

தற்போது இச் சம்பவத்துக்கு பிற்பாடு கொழும்பு மாவட்டத்தில் மலையகத்திலிருந்து வீட்டு வேலைக்கு வந்து வேலை செய்கின்றவர்கள் சிலர் திருப்பி அனுப்பப் படுவதாக சமூக ஊடகங்கள் ஊடாக அறிகின்றோம்

இது ஒரு பண்பற்ற செயல் என்பதையும் சொல்லிக் காட்ட விரும்புகின்றேன்.

ஆனால், இவர்களுக்கான ஒரு சிறந்த தீர்வாக சிறுவர்கள் அல்லாமல் வீட்டு வேலைக்கு அமர்த்தப்படுகின்றவர்கள் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் ஒன்றின் ஊடாக இவ் வேலை சார்ந்த துறையில் பயிற்றுவிக்கப்பட்டு, நிறுவனத்தின் ஊடாக, நிறுவனத்தின் கண்காணிப்பின் கீழ் வேலைக்கு அமர்த்தப்பட்டால் இவ்வாறான ஒரு பிரச்சினைக்கு தீர்வை காணலாம்.

இந்த விடயத்துக்கு எங்களுடைய கல்வி நிறுவனமும் முன் வர தயாராக உள்ளது என்பதையும் குறிப்பிட்டு கொள்ள விரும்புகிறோம்.

அதுமாத்திரமல்ல, இன்றைய சிறுவர்கள், இளைஞர்கள் குறிப்பாக போதைவஸ்துக்கு அடிமையாகி, வாழ்க்கையை சீரழிப்பதையும் சமூக ஊடகங்களுக்கு முன் கொண்டுவந்து, அதற்கு ஒரு திறந்த தீர்வுத் திட்டத்தினையும் மேற்கொள்ள சமூக ஊடக ஆர்வலர்கள் முன்வர வேண்டும் என்பதையே நான் எதிர்பார்க்கிறேன்.

அதை விட்டு விட்டு வெறுமனே சமூக வலைதளங்களில் வீராப்பு பேசிக்கொண்டு வீடுகளில் இருப்பதை நான் விரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment