இந்திய செய்தியாளரை நாங்கள் கொல்லவில்லை - மறுக்கும் தலிபான்கள், குற்றம் சுமத்தும் ஆப்கான் அரசு - News View

Breaking

Post Top Ad

Saturday, July 17, 2021

இந்திய செய்தியாளரை நாங்கள் கொல்லவில்லை - மறுக்கும் தலிபான்கள், குற்றம் சுமத்தும் ஆப்கான் அரசு

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் மேற்கொண்ட தாக்குதலில் இந்தியாவை சேர்ந்த ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவன புகைப்படச் செய்தியாளர் தனிஷ் சித்திக் உயிரிழந்துள்ளார்.

ஆப்கானிஸ்தானில் இராணுவத்தினருக்கும்,  தலிபான்களுக்கும் இடையே கடுமையான  மோதல்கள் இடம்பெற்று வருகின்றன.

ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான் பயங்கரவாதிகளை அடக்குவதற்காக இராணுவம் தாக்குதல் நடத்துவதும், இராணுவத்தினர் மீது தலிபான்கள் வெடிகுண்டு தாக்குதல்கள் நிகழ்த்துவதும் அவ்வப்போது நிகழ்ந்து வருகிறது.

இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் தாக்குதலில் இந்தியாவை சேர்ந்த ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவன புகைப்படச் செய்தியாளர் தனிஷ் சித்திக் உயிரிழந்துள்ளார்.

காந்தகாரில் நடத்தப்பட்ட தாக்குதலில் சிக்கி உயிரிழந்த தனிஷ் சித்திக், தனது திறமைக்கு சான்றாக உயரிய புலிட்சர் பரிசு வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு இந்தியா, ஐ.நா. சபை, ஆப்கானிஸ்தான் அரசு உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் இந்திய பத்திரிக்கையாளரை நாங்கள் கொல்லவில்லை என்று தலிபான்கள் தெரிவித்துள்ளனர். 

இது குறித்து தலிபான்களின் செய்தித் தொடர்பாளர் ஜபியுல்லா முஜாஹித் கூறியதாவது, இந்திய பத்திரிக்கையாளர் யாருடைய துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டார் என்பது எங்களுக்கு தெரியாது. அவர் எப்படி இறந்தார் என்பது பற்றி எங்களுக்கு தெரியாது. அவரது மரணத்துக்கு நாங்கள் வருந்துகிறோம்.

யுத்த பகுதிக்குள் நுழையும் எந்த பத்திரிக்கையாளரும் எங்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அவர்களை நாங்கள் சரியான முறையில் பாதுகாத்து கொள்வோம். பத்திரிக்கையாளர்கள் எங்களுக்கு தெரியாமல் போர் மண்டலத்திற்குள் நுழைகிறார்கள் என்பது வருத்தம் அளிக்கிறது என்றார்.

ஆனால் ஆப்கான் அரசு படை கமாண்டர் கூறும் போது, ஆப்கானிஸ்தான் சிறப்பு படையினர் ஒரு மார்க்கெட் பகுதியை மீட்டு சண்டையிட்ட போது, தலிபான்கள் துப்பாக்கியால் சுட்டதில் தனிஷ் சித்திக் மற்றும் மூத்த ஆப்கான் அதிகாரி உயிரிழந்தனர் என்றார்.

ஆப்கானிஸ்தானில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி நடந்து வந்த போதிலும் பல பகுதிகளை தலிபான் பயங்கரவாதிகள் கைப்பற்றி வருகின்றனர்.

அவர்களை ஒடுக்குவதற்காக அமெரிக்க படைகள்  கடந்த 20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தான் மண்ணில் இருந்து வந்தன. ஆனால் இப்போது அமெரிக்காவுக்கும், தலிபான்களுக்கும் ஏற்பட்ட ஒப்பந்தத்தை அடுத்து அமெரிக்க படைகள் அங்கிருந்து வாபஸ் பெற்றுள்ளன.

அமெரிக்கா வெளியேறியதை அடுத்து தலிபான்கள் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக பல இடங்களையும் கைப்பற்றி வருகிறார்கள்.

இதுவரை நாட்டில் 85 சதவீத நிலப்பரப்பை கைப்பற்றிவிட்டதாக தலிபான்கள் கூறுகிறார்கள். ஆனால் மொத்தமுள்ள  400 மாவட்டத்தில் 3 இல் ஒரு பகுதி மட்டுமே தலிபான்களிடம் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே தலிபான்கள் நாட்டை முழுமையாக கைப்பற்றுவதற்கு பாகிஸ்தான் உதவி வருவதாக ஆப்கானிஸ்தான் குற்றம்சாட்டி வருகிறது.

போரில் ஈடுபட்டு வரும் தலிபான்களுக்கு ஆயுத உதவி, உணவு, வழிகாட்டு தகவல்கள் போன்றவற்றை வழங்கி வருவதாகவும், பாகிஸ்தானின் விமானப்படை தலிபான்களுக்கு உதவுவதாகவும் ஆப்கானிஸ்தான் குற்றம்சாட்டி இருக்கிறது.

No comments:

Post a Comment

Post Bottom Ad