விளங்கிக் கொள்ள முடியாத சுதந்திரக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், அவர்களைத் தெரிவு செய்த மக்களுக்கு எவ்வாறு பொறுப்புக்கூறப் போகின்றார்கள்? : விஜித் விஜயமுனி சொய்சா - News View

Breaking

Tuesday, July 27, 2021

விளங்கிக் கொள்ள முடியாத சுதந்திரக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், அவர்களைத் தெரிவு செய்த மக்களுக்கு எவ்வாறு பொறுப்புக்கூறப் போகின்றார்கள்? : விஜித் விஜயமுனி சொய்சா

(நா.தனுஜா)

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதிநிதிகள் ஆளுந்தரப்பில் முன்நிலை வகிக்கவோ அல்லது தீர்மானங்களில் கோலோச்சவோ முடியாது. மாறாக சாதாரணமாக இருந்துவிட்டுப் போகலாம் என்று அர்த்தப்படும் வகையிலான கருத்தொன்று ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசமினால் வெளியிடப்பட்டுள்ளது. இதனைக்கூட விளங்கிக் கொள்ள முடியாத தயாசிறி ஜயசேகர போன்ற சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், அவர்களைத் தெரிவு செய்த மக்களுக்கு எவ்வாறு பொறுப்புக்கூறப் போகின்றார்கள்? என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினருமான விஜித் விஜயமுனி சொய்சா கேள்வி எழுப்பியிருக்கின்றார்.

கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைக் காரியாலயத்தில் இன்று செவ்வாய்க்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு, ஜனாதிபதிக்கும் சுதந்திரக் கட்சிப் பிரதிநிதிகளுக்கும் இடையில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தை தொடர்பில் ஊடகவியலாளர்களால் கேள்வி எழுப்பப்பட்டபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, ஜனாதிபதிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதிநிதிகளுக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை வெற்றியடைந்திருப்பதாக இன்றைய தினம் சிங்கள நாளிதழொன்றில் செய்தி வெளியாகியுள்ளது.

இருப்பினும் 'ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் முக்கிய கட்சிகளில் ஒன்றாக இருந்து முன்னரங்க அரசியல் செயற்பாடுகளில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஈடுபடுவது தவறு' என்று அதன் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்திருப்பதாக மற்றொரு சிங்களப் பத்திரிகையில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆட்சிபீடமேறுவதற்கு உதவிய கட்சிகளை அவர்கள் எவ்வாறு நடத்துகின்றார்கள் என்பது நன்கு வெளிப்பட்டுள்ளது என்றார்.

No comments:

Post a Comment