அதிபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டுக்கு வரவு செலவு திட்டத்தினூடாக தீர்வு : மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டு போராட்டத்தைக் கைவிடுங்கள் - அமைச்சர் ரமேஷ் பத்திரண - News View

About Us

About Us

Breaking

Tuesday, July 27, 2021

அதிபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டுக்கு வரவு செலவு திட்டத்தினூடாக தீர்வு : மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டு போராட்டத்தைக் கைவிடுங்கள் - அமைச்சர் ரமேஷ் பத்திரண

(எம்.மனோசித்ரா)

நாட்டில் தற்போது காணப்படுகின்ற நிதி நிலைமைகளின் அடிப்படையில் அதிபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டுக்கான தீர்வினை உடனடியாக வழங்கக் கூடிய வாய்ப்புக்கள் இல்லை. எனினும் அடுத்த வரவு செலவு திட்டத்தில் குறித்த முரண்பாடுகளை நீக்குவதை முதலாவது நடவடிக்கையாக முன்னெடுப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.

வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று செவ்வாய்கிழமை நடைபெற்ற போது இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், அதிபர், ஆசிரியர் தொழிற்சங்களினால் முன்னெடுக்கப்பட்டு வரும் பணி பகிஷ்கரிப்பு தொடர்பில் அமைச்சரவையில் ஜனாதிபதி மற்றும் பிரதமரால் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக சகல தொழிற்சங்கங்களுக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் அமைச்சரவை உப குழுவுக்கிடையில் சந்திப்பு இடம்பெற்றது.

அதிபர் மற்றும் ஆசிரியர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ள சம்பள முரண்பாடுகளை தீர்ப்பது அரசாங்கத்தின் கொள்கை ரீதியான தீர்மானமாகும். இதற்கான ஸ்திரமான கொள்கையொன்று உருவாக்கப்பட வேண்டியதன் தேவை உணரப்பட்டு அதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது. அதற்கமைய சம்பளம் தொடர்பான விடயங்களில் எவ்வாறு மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பது தீர்மானிக்கப்படவுள்ளது.

நாட்டில் தற்போது காணப்படுகின்ற நிதி நிலைமைகளின் அடிப்படையில் உடனடியாக சம்பள பிரச்சினைகளுக்கான தீர்வினை வழங்கக் கூடிய வாய்ப்புக்கள் இல்லை. எனினும் அடுத்த வரவு செலவு திட்டத்தில் குறித்த முரண்பாடுகளை நீக்குவதை முதலாவது நடவடிக்கையாக முன்னெடுப்பதற்கு நிதி அமைச்சரும் இணக்கம் தெரிவித்துள்ளார்.

எனவே தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ள பணிப்பகிஷ்கரிப்பை கைவிடுமாறு அதிபர், ஆசிரியர்களிடம் கேட்டுக் கொள்கின்றோம். காரணம் சர்வதேச மற்றும் தனியார் பாடசாலைகளில் கற்பித்தல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

அதிபர், ஆசிரியர்களின் பணிப்பகிஷ்கரிப்பினால் பாதிக்கப்பட்டுள்ள ஏனைய மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டு போராட்டத்தைக் கைவிடுமாறு கேட்டுக் கொள்கின்றோம். அவ்வாறில்லையெனில் கொவிட் தொற்றினால் கல்வியை இழந்துள்ள மாணவர்கள் மேலும் பாதிப்புக்களுக்கு உள்ளாக நேரிடும் என்றார்.

No comments:

Post a Comment