இலங்கைக்கு கடல் மார்க்கமாகவே பெருமளவில் போதைப் பொருள் கடத்தல் : எதிர்வரும் தினங்களில் முன்னெடுக்கப்படவுள்ள விசேட சுற்றிவளைப்புக்கள் - News View

About Us

About Us

Breaking

Monday, July 26, 2021

இலங்கைக்கு கடல் மார்க்கமாகவே பெருமளவில் போதைப் பொருள் கடத்தல் : எதிர்வரும் தினங்களில் முன்னெடுக்கப்படவுள்ள விசேட சுற்றிவளைப்புக்கள்

எம்.மனோசித்ரா

இலங்கைக்கு கடல் மார்க்கமாகவே பெருமளவில் போதைப் பொருள் கொண்டு வரப்படுவதாக தெரியவந்துள்ளது. பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினால் எதிர்வரும் தினங்களில் போதைப் பொருள் தொடர்பில் விசேட சுற்றிவளைப்புக்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

அத்தோடு நேற்று ஞாயிற்றுக்கிழமை பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புக்களில் ஐஸ் மற்றும் ஹெரோயின் ஆகிய போதைப் பொருட்களுடன் பெண்ணொருவர் உள்ளிட்ட 3 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், பியகம பிரதேசத்தில் 10 கிராம் ஹெரோயினுடன் 31 வயதுடைய சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபர் பயணித்த மோட்டார் சைக்கிளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

காத்தான்குடி பிரதேசத்தில் 86 கிராம் ஐஸ் போதைப் பொருளுடன் 50 வயதுடைய சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வேயங்கொட பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் 10 கிராம் ஹெரோயினுடன் 33 வயதுடைய பெண்னொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை பொலிஸாரால் போதைப் பொருளுடன் தொடர்புடைய சுற்றிவளைப்புக்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதே போன்று பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினால் எதிர்வரும் தினங்களில் விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

ஒருபுறம் போதைப் பொருள் பாவனைக்கு நபர்களை அடிமையாவதைத் தடுப்பதற்கும் மறுபுறம் இலங்கைக்கு போதைப் பொருள் கிடைக்கப் பெறுகின்ற வழிகளை இல்லாதொழிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதுவரையில் முன்னெடுக்கப்பட்ட சுற்றி வளைப்புக்களில் இலங்கைக்கு கடல் மார்க்கமாகவே பெருமளவில் போதைப் பொருள் கொண்டு வரப்படுவதாக தெரியவந்துள்ளது.

குறிப்பாக ஹெரோயின் போதைப் பொருள் தென் கடல் மார்க்கத்தின் ஊடாகவும், வடக்கு கடல் மார்க்கத்தின் ஊடாக கேரள கஞ்சா கொண்டு வரப்படுவதாகவும் தெரியவந்துள்ளது.

இவ்வாறு இலங்கைக்கு போதைப் பொருள் கொண்டு வரப்படுவதைத் தவிர்ப்பதற்காக ஏனைய தரப்பினருடன் இணைந்து பல சுற்றிவளைப்புக்களை முன்னெடுப்பதற்கு தயார்ப்படுத்தல்கள் செய்யப்பட்டுள்ளன.

பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவு, விசேட அதிரடிப் படையினர் மற்றும் பிரதேச பொலிஸார் இணைந்து பரந்தளவிலான சுற்றிவளைப்புக்களில் தொடர்ந்தும் ஈடுபட்டுள்ளனர் என்றார்.

No comments:

Post a Comment