ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் அலி ஸாஹிர் மௌலானாவின் தனிப்பட்ட ஏற்பாட்டில் கொவிட் விடுதி மற்றும் தற்காலிக அவசர சிகிச்சை பிரிவு நிர்மாணம் - News View

About Us

About Us

Breaking

Saturday, July 10, 2021

ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் அலி ஸாஹிர் மௌலானாவின் தனிப்பட்ட ஏற்பாட்டில் கொவிட் விடுதி மற்றும் தற்காலிக அவசர சிகிச்சை பிரிவு நிர்மாணம்

ஏறாவூர் பிரதேசத்தில் அதிகளவான நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டு வரும் நிலையில் அவர்கள் சிகிச்சைக்காக தூரப்பிரதேசங்களுக்கு அனுப்பப்படுவதால் பல்வேறு மன உளைச்சல்களுக்கு ஆளாகின்றமையால் ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் கொவிட் சிகிச்சை நிலையம் ஒன்றை அமைப்பதற்கான ஏற்பாடுகள் முன்னாள் இராஜாங்க அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானா அவர்களது தனிப்பட்ட ஏற்பாட்டில் சுகாதார அதிகாரிகளது வழிகாட்டுதலுடன் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதன் பிரகாரம் அலி ஸாஹிர் மௌலானா அவர்களது தனிப்பட்ட முயற்சியினால் ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் முதற்கட்டமாக 15 நோயாளிகளை பராமரிக்கும் வகையில் கொவிட் விடுதி ஆரம்பிக்கப்பட உள்ளது.

இதற்காக ஏற்கனவே 5 கட்டில் வசதிகளோடு உள்ள பகுதியை மேலதிகமாக விஸ்த்தரித்து அவசர சிகிச்சை பிரிவையும் உள்வாங்கி 15 கட்டில்களை கொண்ட பூரண தொகுதியாக மாற்றியமைத்திட ஒரு மில்லியன் ரூபாவும், அவசர சிகிச்சை பிரிவை வெளி நோயாளர் பிரிவு கட்டடத்தின் பிரிதொரு இடத்திற்கு இடம்மாற்றி அங்கு அதனை அமைத்துக் கொள்ள 11 இலட்சம் ரூபாவும் செலவிடப்பட்டு நேற்று அதற்கான குளிரூட்டி வசதிகளும் மௌலானா அவர்களால் கையளிக்கப்பட்டது.
அத்துடன் கொவிட் நோயாளர் விடுதியில் உள்ள 15 கட்டில்களில் 8 கட்டில்களுக்கு முழுமையான ஒட்சிசன் வசதிகளை கொண்டதாக மேம்படுத்துவதற்காக 2 மில்லியன் ரூபாய் பெருமதியான முழுமையான உபகரண தொகுதிகளை வழங்கிடவும் ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஏறாவூர் பிரதேச கொவிட் நோயாளிகளை ஏறாவூர் வைத்தியசாலையில் சகல வசதிகளுடன் சிகிச்சையளிப்பதற்கான மேம்படுத்தல் செயற்பாட்டிற்கான ஏற்பாடுகள் பிரதேச மக்கள் நலனை முன்னிறுத்தி அலி ஸாஹிர் மௌலானா அவர்களது தனிப்பட்ட முயற்சியில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

ஏறாவூர் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் திருமதி தயாளினி சசிகுமார் தலைமையில் இடம்பெற்ற நேற்றைய ஆரம்ப நிகழ்வில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் மயூரன், ஏறாவூர் நகர சபை தவிசாளர் நழீம், பிராந்திய சுகாதார சேவை பணிமனையின் திட்டமிடல் பொறுப்பு வைத்தியர் சசிகுமார், ஏறாவூர் பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன தலைவர் முஹைதீன் உட்பட முக்கியஸ்த்தர்கள், வைத்தியசாலை வைத்தியர்கள் ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது ஏறாவூர் வைத்தியசாலையில் சகல வசதிகளையும் கொண்ட பிரேத அறை ஒன்றின் அவசியம் குறித்தும், கழிவுகளை எரிக்கும் வகையிலான பிரத்தியோக காணி ஒன்றின் அவசியம் குறித்தும் வைத்தியசாலை தரப்பினால் அலி ஸாஹிர் மௌலானா அவர்களிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டதுடன், தமது பிரதேசத்தின் மக்களது தேவை குறித்து தாமாக முன்வந்து பல லட்சக்கணக்கான நிதியினை ஒழுங்கு செய்து இந்த ஏற்பாட்டை செய்து தந்த முன்னாள் அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானா அவர்களுக்கு வைத்தியசாலை தரப்பினர் தமது நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment