சுதந்திர கட்சி ஆதரவு வழங்காமல் இருந்திருந்தால் இன்று ஜனாதிபதியும், பிரதமரும் ஆட்சியதிகாரத்தில் இருந்திருக்கமாட்டார்கள் - தயாசிறி ஜயசேகர - News View

Breaking

Post Top Ad

Friday, July 9, 2021

சுதந்திர கட்சி ஆதரவு வழங்காமல் இருந்திருந்தால் இன்று ஜனாதிபதியும், பிரதமரும் ஆட்சியதிகாரத்தில் இருந்திருக்கமாட்டார்கள் - தயாசிறி ஜயசேகர

(இராஜதுரை ஹஷான்)

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி பொதுஜன பெரமுனவிற்கு ஆதரவு வழங்காமலிருந்திருந்தால் 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருக்காது. பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் கடந்த காலத்தை நினைவுப்படுத்திக் கொள்ள வேண்டும். என ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவின் இல்லத்தில் நேற்று இரவு இடம் பெற்ற கட்சியின் செயற்குழு கூட்டத்தை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணியில் பங்காளி கட்சியாக உள்ளோம் என்ற காரணத்திற்காக பேச்சு சுதந்திரம் தடை செய்யப்படவில்லை . வழங்கப்பட்டுள்ள அமைச்சுக்கள் நகைச்சுவையானது என்று குறிப்பிட்டேன். இதனை கொண்டு ஆளும் மற்றும் எதிர்த்தரப்பின் உறுப்பினர்கள் பல கருத்துக்களை முன்வைத்துள்ளார்கள்.

பத்திக் கைத்தரி மற்றும் உள்நாட்டு ஆடை உற்பத்தி இராஜாங்க அமைச்சினை இராஜினாமா செய்யத் தயாராக உள்ளேன். இத்தீர்மானத்தை சுதந்திர கட்சியின் தலைவர் மற்றும் செயற்குழு கூட்டத்திலும் குறிப்பிட்டுள்ளேன். பதவி விலகுமாறு அவர்கள் பணித்தால் நிச்சயம் பதவி விலகுவேன்.

2019 ஆம் ஆண்டு ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி இடம் பெற்று முடிந்த ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்களில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவிற்கு ஆதரவு வழங்காமல் இருந்திருந்தால் இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ? பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் ஆட்சியதிகாரத்தில் இருந்திருக்கமாட்டார்கள்.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியை விமர்சிக்கும், இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம உள்ளிட்டோர் கடந்த காலத்தை நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும். சுதந்திர கட்சியை புறக்கணிக்க நினைப்பது பாரிய அரசியல் துரோகமாகவே கருதப்படும்.

செயற்குழு கூட்டத்தில் அரசாங்கத்தில் வெளியேறுவோம் என ஒரு தரப்பினரும், வெளியேறுவதற்கான தருணம் இதுவல்ல என பிறிதொரு தரப்பினும் குறிப்பிட்டுள்ளார்கள். அரசாங்கத்திலும், கூட்டணியிலும் காணப்படும் பிரச்சினைகளுக்கு இரு தரப்பு பேச்சுவார்த்தை ஊடாக தீர்வு கண்டு இணக்கமாக செயற்பட எதிர்பார்த்துள்ளோம் என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad