கொத்தலாவலை பல்கலைக்கழக சட்ட மூலத்தை நியாயப்படுத்த கல்வி அமைச்சர் பெரும் முயற்சி மேற்கொண்டு, சிறுபிள்ளைத்தனமாகவே உரையாற்றியிருந்தார் - ரவூப் ஹக்கீம் - News View

About Us

About Us

Breaking

Friday, July 9, 2021

கொத்தலாவலை பல்கலைக்கழக சட்ட மூலத்தை நியாயப்படுத்த கல்வி அமைச்சர் பெரும் முயற்சி மேற்கொண்டு, சிறுபிள்ளைத்தனமாகவே உரையாற்றியிருந்தார் - ரவூப் ஹக்கீம்

(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)

கொத்தலாவலை பல்கலைக்கழத்தை மறைமுகமாக தனியார் மயமாக்கும் திட்டத்தையே அரசாங்கம் மேற்கொண்டு செல்கின்றது. அதனால்தான் அரசாங்கத்தின் இந்த சட்ட மூலத்துக்கு பாரிய எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது. அதனை கட்டுப்படுத்த ஏகாதிபத்திய முறையை அரசாங்கம் பயன்படுத்தி வருகின்றது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற ஜெனரல் சேர் ஜாேன் கொத்தலாவலை தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகம் தொடர்பான சட்ட மூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், கொத்தலாவலை பல்கலைக்கழக சட்ட மூலத்தை நியாயப்படுத்த கல்வி அமைச்சர் பெரும் முயற்சி மேற்கொண்டு, சிறுபிள்ளைத்தனமாகவே உரையாற்றியிருந்தார்.

அரசாங்கம் கல்வி அமைச்சராகவும் அமைச்சின் செயலாளராகவும் பேராசியர்கள் இருவரை நியமித்ததன் மூலம் உயர் கல்வித்துறை பொற்காலமாக மாறும் என்றே நினைத்தோம். ஆனால் அதற்கு மாறாகவே தற்போது இடம்பெறுகின்றது. தெரிந்தோ தெரியாமலாே அவரும் கட்டளையின் பிரகாரம் செயற்பட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றார்.

அத்துடன் இந்த சட்ட மூலத்தை நிறைவேற்றிக் கொள்வதில் அரசாங்கத்துக்குள் பிரச்சினை ஏற்பட்டிருக்கின்றது. அதனால்தான் இந்த விவாதத்தை நாளை வரை (இன்று) ஒத்தி வைக்க நேரிட்டிருக்கின்றது.

மறைமுகமாக இந்த பல்கலைக்கழகத்தை தனியார் மயமாக்கும் திட்டமே இடம்பெறுகின்றது. அதனை மறைக்க முடியாது. உறுப்பினர்கள் பேச்சுக்களை பார்க்கும்போது, தொண்டைக்கு தெரியாமல் மருந்து குடிக்க முயற்சிப்பதுபோல் தெரிகின்றது.

மேலும் நாட்டில் இருக்கும் பல்கலைக்கழங்களுக்கு ஒதுக்கீடுகளை மேற்கொள்வதில் பாரிய அசாதாரண நிலை இடம்பெறுகின்றது. ஆனால் கொத்தலாவலை பல்கலைக்கழத்துக்கு பாரிய ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. பாரிய கட்டிடங்கள் இருக்கின்றன. ஒதுக்கீடுகளில் பயனில்லை. மாறாக வழங்கப்படும் பட்டச்சான்றிதழுக்கு தரம் இருக்க வேண்டும்.

தரப்படுத்தல் மேற்கொள்ளும் வேலைத்திட்டத்தை இன்னும் மேற்கொள்ளவில்லை. எமது காலத்தில் உலக வங்கி, சட்டமா அதிபர் திணைக்களம் இணைந்து பல்கலைக்கழகங்களின் தர நிர்ணம் மேற்கொள்ள ஆணைக்குழு ஒன்றை அமைத்தோம். அதற்கு என்ன நடந்தது என்று தெரியாது.

அத்துடன் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வெறுமனே நிதி ஒதுக்கீடுகளை செய்யும் வங்கி ஒன்றை போலவே செயற்படுகின்றது. அவ்வாறு இருக்க முடியாது. உண்மையில் மானியங்கள் ஆணைக்குழு தர நிர்ணய விடயத்தில் தலையிட வேண்டும்.உலக தரப்படுத்தலில் எமது பல்கலைக்கழகங்கள் அருகில் கூட இல்லை.

பேராதனை பல்கலைக்கழகத்தின் வைத்திய பீடத்தில் பழைய கட்டிடங்களே இன்னும் இருக்கின்றன. ஆனால் கொத்தலாவலை பல்கலைக்கழகத்துக்கு தேவையான கட்டிடங்கள் இருக்கின்றன. அதனால் தரம் இருக்கும் இடத்தில் கட்டிடங்கள் இல்லை கட்டிடங்கள் போதுமானளவு இருக்கும் இடத்தில் தரம் இல்லை. இதுதான் எமது பல்கலைக்கழகங்களின் நிலைமை.

எனவே இந்த சட்ட மூலத்துக்கு இன்று பாரிய எதிர்ப்பு மாணவர்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கின்றது. மக்களின் போராட்டங்களை கட்டுப்படுத்த அரசாங்கம் ஏகாதிபத்திய முறையை கடைப்பிடித்து வருவதையே காண்கின்றோம். இது எதிர்காலத்தில் பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் என்றார்.

No comments:

Post a Comment