அதிபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டினைத் தீர்க்கக் கோரி கலவான நகரில் ஆர்ப்பாட்டப் பேரணி : அரசாங்கம் நியாயமான தீர்வினை வழங்கும் வரை போராட்டம் தொடரும் - News View

About Us

About Us

Breaking

Thursday, July 29, 2021

அதிபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டினைத் தீர்க்கக் கோரி கலவான நகரில் ஆர்ப்பாட்டப் பேரணி : அரசாங்கம் நியாயமான தீர்வினை வழங்கும் வரை போராட்டம் தொடரும்

அதிபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டினைத் தீர்க்கக் கோரி இன்று வியாழக்கிழமை கலவான நகரில் இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பாரிய ஆர்ப்பாட்டப் பேரணியில் இன மத மொழி பாகுபாடின்றி பல தொழிற்சங்கங்களும், பல்லாயிரக் கணக்கான ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.

கடந்த 24 ஆண்டுகளாக தீர்க்கப்படாத அதிபர், ஆசிரியர் சம்பள முரண்பாட்டினை தீர்த்தல், கொத்தலாவலை சட்டத்தை வாபஸ் பெறல், இணையவழிக் கல்விக்குத் தேவையான வசதி வாய்ப்புக்களை மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் ஏற்படுத்திக் கொடுத்தல் வேண்டும் போன்ற முக்கிய கோரிக்கைகளை அரசாங்கத்திடம் முன்வைத்து இப்பாரிய போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இவ் ஆர்ப்பாட்டப் பேரணியில் இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் உப தலைவர் சுந்தரலிங்கம் பிரதீப் அவர்கள் உரையாற்றுகையில், கடந்த 24 ஆண்டுகளாக ஆட்சிக்கு வருகின்ற அரசாங்கங்கள் சம்பள உயர்வு விடயத்தில் எம்மை தொடர்ச்சியாக ஏமாற்றி வருகின்றன. இன்று அரசாங்க ஊழியர்களில் மிகக் குறைந்தளவு சம்பளத்தை பெறுபவர்களாக ஆசிரியர்களே காணப்படுகின்றனர்.

வாழ்க்கை செலவுகள் அதிகரித்துள்ள இக்காலத்தில் ஆசிரியர்கள் நாட் சம்பளமாக ரூபாய் 1,200 இதனையே பெற்றுக் கொள்கின்றனர். ஒரு நாள் பெற்றுக் கொள்கின்ற மிகக் குறைந்த இச் சம்பளத்தினைக் கொண்டே இந்நோய் தொற்றுக் காலத்தில் ஆசிரியர்கள் இணைய வழிக் கல்வியை முன்னெடுத்தார்கள்.

இக்கட்டான சூழ்நிலையிலும் எமது மாணவர்களினதும், நாட்டினதும் முன்னேற்றத்திற்காக எம் ஆசிரியர்கள் அளப்பரிய சேவையாற்றி வந்துள்ளனர். எனவே எமது இச்சம்பள உயர்விற்கான நியாயமான, சரியான தீர்வினை அரசாங்கம் வழங்கும் வரையில் எமது அதிபர், ஆசிரியர்களின் இப் போராட்டம் தொடரும் எனக் குறிப்பிட்டார்.

மேலும் இப்போராட்டத்தில் இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளர் ராஜமாணிக்கம் அசோக்குமார் மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளர் மூக்கன் சந்திரகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment