தலைமன்னாரில் மீட்கப்பட்ட சடலம் அடையாளம் காணப்பட்டது : மரபணு பரிசோதனைக்கு உத்தரவைப் பெற நீதிமன்றத்தை நாடியுள்ள பொலிசார் - News View

About Us

About Us

Breaking

Thursday, July 29, 2021

தலைமன்னாரில் மீட்கப்பட்ட சடலம் அடையாளம் காணப்பட்டது : மரபணு பரிசோதனைக்கு உத்தரவைப் பெற நீதிமன்றத்தை நாடியுள்ள பொலிசார்

தலைமன்னார் தீடையில் கடந்த 16.07.2021 வெள்ளிக்கிழமை மீட்கப்பட்ட சடலம் அடையாளம் காணப்படுவதற்காக மன்னார் பொது வைத்தியசாலையில் கடந்த 13 தினங்களாக வைக்கப்படடிருந்தபோது கற்பிட்டியைச் சேர்ந்த ஒருவர் தனது தந்தை என அடையாளம் காட்டியுள்ளார்.

இந்நிலையில் குறித்த நபரினதும், சடலத்தினதும் மரபணு பரிசோதனைகளை பெறுவதற்கான உத்தரவைப் பெற தலைமன்னார் பொலிசார் மன்னார் நீதிமன்றத்தை நாடியுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

கடந்த 16.07.2021 வெள்ளிக்கிழமை அன்று தலைமன்னார் பாக்குநீர் பகுதியில் கடற்பரப்புக்குள் அமைந்துள்ள ஐந்தாவது தீடையில் தலைமன்னார் கிராமம் எம்.என். 49 வது கிராம அலுவலகப் பிரிவில் ஆணின் சடலம் ஒன்று கடற்படையினரால் கண்டுபிடிக்கப்பட்டு தலைமன்னார் பொலிசாருக்கு தெரியப்படுத்தப்பட்டிருந்தது.

இந்த நிலையில் தலைமன்னார் பொலிசார் கடற்படையினரின் உதவியுடன் அவ்விடத்துக்குச் சென்று குறித்த சடலத்தை மீட்டு மன்னார் பொது வைத்தியசாலையில் அந்த சடலத்தை அடையாளம் காணவும் பிரேத பரிசோதனையை மேற்கொள்வதற்காகவும் வைக்கப்பட்டுள்ளது.

இது விடயமாக முருங்கன் மரண விசாரனை அதிகாரி சந்தியாப்பிள்ளை எட்வேட் குணகுமார் சடலத்தை பார்வையிட்டதுடன் விசாரனைகள் முன்னெடுக்கப்பட்டன.

குறித்த சடலம் உடன் அடையாளம் காணப்படாமையால் சடலைத்தை இனம் காண்பதற்காக மன்னார் பொது வைத்தியசாலையில் 14 நாட்களுக்கு வைக்கும்படி கட்டளை பிறப்பித்திருந்தார்.

அடையாளம் காணப்படாத பட்சத்தில் இதை அரச செலவில் அடக்கம் செய்வதற்கான நடவடிக்கையையும் மேற்கொள்ள தெரிவிக்கப்பட்டது.

கண்டுபிடிக்கப்பட்ட சடலத்தில் எந்தவிதமான உடைகளும் காணப்படவில்லை.

குறித்த சடலத்தின் கை மற்றும் முகம் சிதைவுற்று காணப்பட்டன. இடது கால் காணப்படவில்லை. தலை மொட்டையாக காணப்பட்டது.

இந்த நிலையில் அந்த சடலத்தை இனம் காண்பதற்காக புத்தளப் பகுதியிலிருந்து சிலர் பார்வையிட்டு சென்றிருந்த போதிலும் அடையாளம் காட்டப்படவில்லை.

ஆனால் நேற்று புதன்கிழமை (28.07.2021) கற்பிட்டியிலிருந்து வந்தவர்களில் ஒருவர் இது தனது தந்தை எனவும் கடலில் மீன்பிடிக்கச் சென்றபோது காணாமல் போயிருந்தார் எனவும் தெரிவித்து பொலிசார் முன்னிலையில் அடையாளம் காட்டியுள்ளார்.

இதைத் தொடர்ந்து தலைமன்னார் பொலிசார் இறந்தவரினதும் அடையாளம் காட்டிய மகனின் மரபணு பரிசோதனைகளை பெறுவதற்கான உத்தரவை மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்றில் பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

No comments:

Post a Comment