சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்திடம் முறையிடுவதால் தீர்வு ஏற்படப் போவதில்லை : முன்னாள் பிரதியமைச்சர் புத்திரசிகாமணி - News View

Breaking

Post Top Ad

Thursday, July 15, 2021

சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்திடம் முறையிடுவதால் தீர்வு ஏற்படப் போவதில்லை : முன்னாள் பிரதியமைச்சர் புத்திரசிகாமணி

இலங்கை பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளம் மற்றும் ஏனைய பிரச்சினைகள் தொடர்பாக சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்திடம் முறையிடுவதால் தீர்வு ஏற்படப் போவதில்லை என முன்னாள் பிரதியமைச்சர் புத்திரசிகாமணி தெரிவித்துள்ளார்.

ஆயிரம் ரூபா சம்பள விவகாரத்தை ஐ.எல்.ஓ கவனத்துக்கு கொண்டு வந்திருப்பதாக ஒரு தொழிற்சங்கத் தலைவர் தெரிவித்ததையடுத்தே புத்திரசிகாமணி இவ்வாறு கூறியுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனம் ஒரு பொலிஸ் அல்லது நீதிமன்ற அதிகாரம் கொண்ட அமைப்பு அல்ல. அவர்களால் தீர்ப்பு கூறவோ அல்லது பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக் கொடுக்கவோ முடியாது. 

இலங்கை பெருந்தோட்ட தொழிலாளர்களின் பிரச்சினைகளை சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்திற்கு கடிதம் மூலம் முறைப்பாடு செய்துள்ளோம் என ஊடகங்களில் தொழிற்சங்கங்கள் செய்திகள் வெளியிடுவதன் மூலம் தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணமுடியாது .

சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்திற்கு ஒரு முறைப்பாடு கடிதம் அனுப்பினால் அவர்கள் சம்பந்தப்பட்டவர்களிடமும் அரசாங்கத்திடமும் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்புவார்கள். அதற்கு சம்பந்தப்பட்டவர்களும் அரசாங்கம் கூறும் பதிலை புகார் செய்தவர்களுக்கு அனுப்பி வைப்பார்கள். அல்லது வருடாந்தம் நடைபெறுகின்ற மாநாட்டில் சமர்ப்பித்து இலங்கை அரசாங்க பிரதிநிதிகளின் கூற்றை அறிக்கையாக தயாரித்து முறைப்பாடு செய்தவர்களுக்கு பதிலாக அனுப்பி வைப்பார்கள். இந்த அரசாங்கத்தின் கூற்று ஏற்கனவே சம்பள நிர்ணைய சபையில் எடுக்கப்பட்ட முடிவாகதான் இருக்கும். 

தொழிற்சங்கங்கள் வெறுமனே இப்பிரச்சினையை சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனிடத்திடம் சமர்ப்பித்தோம் என்று மக்களுக்கு பூச்சாண்டி காட்டுவதில் எவ்வித பிரயோசனமும் இல்லை.

சம்பள நிர்ணைய சபையில் முடிவு செய்யப்பட்ட தீர்மானங்களை கம்பனிகள் நிறைவேற்றாமல் விட்டால் நீதிமன்றம் செல்லும் வாய்ப்பு உண்டு என்பதை சுட்டிக்காட்டுகிறார். கூட்டு ஒப்பந்தங்களில் செய்துகொள்ளப்பட்ட சலுகைகளையும் உரிமைகளையும் குறைக்க முடியாது. அதன்படி தொழிலாளர்களிடம் சந்தா பிடிக்க முடியாதென கூற முடியாது. தொழிலாளர்களுடைய வேலைப்பளுவை அதிகரிக்கவும் முடியாது என அவர் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad