தோட்ட நிர்வாகங்களின் நடவடிக்கைகளை தொழில் அமைச்சு உடனடியாக அவதானிக்க வேண்டும் : செந்தில் தொண்டமான் - News View

Breaking

Post Top Ad

Thursday, July 15, 2021

தோட்ட நிர்வாகங்களின் நடவடிக்கைகளை தொழில் அமைச்சு உடனடியாக அவதானிக்க வேண்டும் : செந்தில் தொண்டமான்

தோட்ட நிர்வாகங்களின் நடவடிக்கைகளை தொழில் அமைச்சு உடனடியாக அவதானிக்க வேண்டும் என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும் பிரதமரின் இணைப்புச் செயலாளருமான செந்தில் தொண்டமான் கோரிக்கை விடுத்துள்ளார்.

தேசிய தொழிலாளர் ஆலோசனை குழுகூட்டம் நேற்று தொழில் அமைச்சர் நிமால் சிறிபாலடி சில்வா தலைமையில் அவரது அமைச்சில் இடம்பெற்றது. 

இக்கலந்துரையாடலில் தொழில் அமைச்சர் நிமால் சிறிபாலடி சில்வா, இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், சட்டத்தரணி மாரிமுத்து, தொழில் ஆணையாளர் மற்றும் தொழில் திணைக்கள அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில் செந்தில் தொண்டமான் மேலும் வலியுறுத்தியதாவது, சம்பள நிர்ணய சபையின் முடிவுகளுக்கு எதிராக தோட்ட நிர்வாகங்கள் தொடர்ந்து செயற்படும் பட்சத்தில் தோட்ட நிர்வாகங்கள் கடைப்பிடிக்கும் அதேபோக்கிலேயே தொழிலாளர்களும் செல்ல வேண்டிய சூழ்நிலை உருவாகும். 

தோட்டங்களில் கை காசுக்கு பணிபுரிபவர்களுக்கு 1000 வழங்க வேண்டுமென கூறப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து 700 ரூபாவே வழங்கப்பட்டு வருகிறது. பல தோட்டங்களில் 20 கிலோவுக்கு கீழ் கொழுந்து எடுத்தால் கிலோவுக்கு 40 ரூபாவின் பிரகாரமே கணக்கு முடிக்கப்படுகிறது.

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரம் தொடர்பில் சம்பள நிர்ணய சபையின் முடிவுக்கு எதிராக சம்பளம் வழங்கப்படுவதுடன், இதற்கு தனியொரு சட்டத்தையும் வகுத்து வருகின்றனர். 

கொவிட் காலம் என்பதால் போராட்டங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் மேற்கொள்ள முடியாதென்ற சூழ்நிலையை அவர்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கம்பனிகள் தொடர்ந்து தொழிலாளர்களுக்கு எதிரான அடக்குமுறைகளை கையாண்டு வருகின்றனர்.

உடனடியாக தொழில் அமைச்சு இந்த விவகாரத்தில் தலையீட்டு தொழிலாளர்களுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்காவிட்டால் தோட்ட நிர்வாகங்கள் கடைப்பிடிக்கும் அதே போக்கையே தொழிலாளர்களும் கடைப்பிடிக்க நேரிடும். அவ்வாறான சூழல் எழுந்தால் எந்தவொரு தோட்டத்தையும் நிர்வாகங்களால் நிர்வாகிக்க முடியாது போகுமெனவும் செந்தில் தொண்டமான் வலியுறுத்தினார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad