தடுப்பூசி வழங்கல் நடவடிக்கைகள் தடையின்றி முன்னெடுக்கப்படும் : ஒவ்வாமை காணப்படுமாயின் கடிதம் பெற்றுக் கொண்டு செலுத்தி கொள்ளலாம் - வைத்திய நிபுணர் ரஜீவ் மேனன் - News View

About Us

About Us

Breaking

Thursday, July 1, 2021

தடுப்பூசி வழங்கல் நடவடிக்கைகள் தடையின்றி முன்னெடுக்கப்படும் : ஒவ்வாமை காணப்படுமாயின் கடிதம் பெற்றுக் கொண்டு செலுத்தி கொள்ளலாம் - வைத்திய நிபுணர் ரஜீவ் மேனன்

(நா.தனுஜா)

நாடளாவிய ரீதியில் தாதியர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள போதிலும் மேல் மாகாணத்திலுள்ள வைத்தியசாலைகளில் நிறுவப்பட்டுள்ள தடுப்பூசி வழங்கல் மையங்கள் மூலம் தடுப்பூசி வழங்கல் நடவடிக்கைகள் நாளை வெள்ளிக்கிழமை தடையின்றி முன்னெடுக்கப்படும் என்று இலங்கைத் தேசிய வைத்தியசாலையின் வைத்திய நிபுணர் ரஜீவ் மேனன் தெரிவித்துள்ளார்.

அதேவேளை மேல் மாகாணத்தில் வசிக்கும் எவரெனினும் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ள விரும்பினாலும், அவர்களுக்கு ஒவ்வாமை நிலைமைகள் காணப்படுமாயின் சுகாதார மருத்துவ அதிகாரியிடம் கடிதமொன்றைப் பெற்றுக் கொண்டு வைத்தியசாலைக்குச் சென்று தடுப்பூசியைப் பெற முடியும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

பதவி உயர்வு மற்றும் தாதியர் யாப்பில் மாற்றங்களை ஏற்படுத்தல் உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து நாடளாவிய ரீதியில் தாதியர்கள் இரு நாள் சுகயீன விடுமுறை தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர். இன்று வியாழக்கிழமை ஆரம்பிக்கப்பட்ட இந்தத் தொழிற்சங்க வெள்ளிக்கிழமையும் தொடரவுள்ளது.

எனினும் மேல் மாகாணத்தில் உள்ள 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்குத் தடுப்பூசி வழங்குவதற்காக அனைத்து வைத்தியசாலைகளிலும் ஸ்தாபிக்கப்பட்ட தடுப்பூசி வழங்கல் நிலையங்கள் இவ்விரு நாட்களிலும் இயங்கும் என்று வைத்தியநிபுணர் ரஜீவ் மேனன் தெரிவித்துள்ளார்.

தாதியர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டாலும் தன்னார்வ வைத்தியர்களை மூலம் ஏற்கனவே திட்டமிடப்பட்டவாறு தடுப்பூசி வழங்கும் பணிகள் மேல் மாகாணத்தில் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்றும் ரஜீவ் மேனன் அவரது டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை மேல் மாகாணத்திலுள்ள 45 வைத்தியசாலைகளில் தடுப்பூசி வழங்கல் மையங்கள் நிறுவப்பட்டுள்ளமையின் ஊடாக சினோபாம் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளும் மக்களின் எண்ணிக்கை 38 சதவீதத்தினால் அதிகரித்துள்ளது. 

இதன் மூலம் ஒரேயொரு நாளில் (புதன்கிழமை) சினோபாம் முதலாம் கட்டத் தடுப்பூசி 91,759 பேருக்கும், இரண்டாம் கட்டத் தடுப்பூசி 79,236 பேருக்குமென மொத்தமாக 170,995 சினோபாம் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன என்றும் அவர் தனது டுவிட்டர் பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேல் மாகாணத்தில் வசிக்கின்ற தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள விரும்பும் நபர்களுக்கு ஏதேனும் ஒவ்வாமைகள் காணப்படுமாயின், அவர்கள் வசிக்கும் பகுதிக்குப் பொறுப்பான சுகாதார மருத்துவ அதிகாரியிடம் கடிதமொன்றைப் பெற்றுக் கொண்டு, அருகிலுள்ள வைத்தியசாலைக்குச் சென்று சினோபாம் முதலாம் கட்டத் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ள முடியும் என்றும் வைத்திய நிபுணர் ரஜீவ் மேனன் அறிவுறுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment