நீங்கள் கைது செய்தாலும் அதற்கு பயந்து நாங்கள் எமது போராட்டங்களை கைவிடமாட்டோம் : எதிர்க்கட்சியினர் சபையில் சூளுரை - News View

Breaking

Post Top Ad

Saturday, July 10, 2021

நீங்கள் கைது செய்தாலும் அதற்கு பயந்து நாங்கள் எமது போராட்டங்களை கைவிடமாட்டோம் : எதிர்க்கட்சியினர் சபையில் சூளுரை

(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)

தனிமைப்படுத்தல் சட்டத்தின் பிரகாரம் உரிமைகளுக்காக போராடுபவர்களை கைது செய்வதற்கோ அவர்களை தனிமைப்படுத்துவதற்கோ பொலிஸாருக்கு எந்த அதிகாரமும் இல்லை. அதனால் நாட்டின் சட்டத்துக்கு முரணாக மேற்கொள்ளப்படும் கைதுகள் தொடர்பில் அடிப்படை உரிமை மீறல் வழக்கு தொடுப்போம். அத்துடன் நீங்கள் கைது செய்தாலும் அதற்கு பயந்து நாங்கள் எமது போராட்டங்களை கைவிடமாட்டோம் என எதிர்க்கட்சிகள் சபையில் தெரிவித்துள்ளது.

பாராளுமன்றம் நேற்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் கூடியது. பிரதான நடவடிக்கைகளை தொடர்ந்து ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க எழுந்து, எமது அரசியலமைப்பின் பிரகாரம் ஒன்றுகூடும் உரிமை அனைவருக்கும் இருக்கின்றது. அவ்வாறு இருந்தும் உரிமைக்களுக்காக போராடிய தொழிற்சங்க உறுப்பினர்கள் பலர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

தனிமைப்படுத்தல் சட்டத்தில் தொழிற்சங்கங்களின் போராட்டத்தை தடுக்க எந்த அதிகாரமும் இல்லை. அதனால் தொழிற்சங்கங்களுடன் கலந்துரையாடி பொலிஸாரின் நடவடிக்கை தொடர்பில் விரைவாக குழு அமைக்க வேண்டும். ஒன்று கூடுவதற்கும் ஆர்ப்பாட்டங்கள் செய்வதற்கும் அடிப்படை உரிமை இருக்கின்றது.

அதேபோன்று தனிமைப்படுத்தல் சட்டத்தின் பிரகாரம் யாரையும் தூரப்பிரதேசங்களுக்கு அனுப்ப முடியாது. அவர்களுக்கு பீ.சீ.ஆர். பரிசோதனையும் மேற்கொள்ளவில்லை. அப்படியானால் நீங்கள் அதற்கு ஏற்ற வகையில் சட்டத்தில் மாற்றங்களை மேற்கொள்ளுங்கள். அவ்வாறு இல்லாமல் இதனை செய்ய முடியாது என்றார்.

அதனைத் தொடர்ந்து எழுந்த எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவிக்கையில், கொவிட் தொடர்பான சுகாதார நடைமுறைகள் அடங்கிய வர்த்தமானி அறிவிப்புகள் சுகாதார பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டிருக்கின்றன. அதனை நடைமுறைப்படுத்தும் அதிகாரம் அவருக்கே இருக்கின்றது. அவ்வாறு இருக்கும்போது ஆர்ப்பாட்டம் செய்தவர்களை மோசமான முறையில் பொலிஸார் கைது செய்து, நீதிமன்றத்துக்கு ஆஜர்ப்படுத்தினர்.

அவ்வாறு நீதிமன்றத்துக்கு ஆஜர்படுத்தியவர்களுக்கு நீதிமன்றம் பிணை வழங்கியபோதும், சுகாதார அதிகாரி அல்லது பொது சுகாதார அதிகாரியின் அனுமதி இல்லாமல் பொலிஸார், அவர்களை கைது செய்து கொண்டுவந்த பஸ் வண்டியிலேயே தனிமைப்படுத்த கொண்டு சென்றனர். அவர்களுக்கு பீ.சீ.ஆர், பரிசோதனை எதுவும் இல்லாமல் இவ்வாறு அழைத்துச் செல்ல பொலிஸாருக்கு என்ன அதிகாரம் இருக்கின்றது?

இதன் மூலம் பொலிஸார் சுகாதார நடைமுறைகளை மீறி இருப்பதுடன் நாட்டின் அரசியலமைப்பையும் மீறி இருக்கின்றனர். சுகாதார அதிகாரிகளின் அதிகாரங்களை பொலிஸார் கையில் எடுத்துக் கொண்டுள்ளனர். அப்படியானால் நாட்டில் காட்டு சட்டமா இருக்கின்றது.

பசில் ராஜபக்ஷ் பாராளுமன்ற உறுப்பினர் பதவி ஏற்கும்போதும், அவர் அமைச்சு பதவி ஏற்றுக் கொள்ளும்போதும் நாட்டின் பல பிரதேசங்களிலும் மக்கள் ஒன்றுகூடி பட்டாசு கொளுத்தி, பேரணி சென்றார்கள். அப்போது ஏன் பொலிஸார் இந்த தனிமைப்படுத்தல் சட்டத்தை அமுல்படுத்தவில்லை என கேட்கின்றேன் என்றார்.

அதனைத் தொடர்ந்து எழுந்த அநுரகுமார திஸாநாயக்க தெரிவிக்கையில், சுகாதார பணிப்பாளரால் நாயகத்தினால் பொலிஸாருக்கு விடுத்திருக்கும் அறிக்கையில், பணிபகிஷ்கரிப்பு, போராட்டங்கள் காரணமாக கொவிட் பரவும் அபாயம் இருக்கின்றது என்றே தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. அப்படியானால் பஸ்களில் பயணிகள் நெருங்கிக் கொண்டு செல்கின்றனர்.

பசில் ராஜபக்ஷ் பதவி ஏற்பதை முன்னிட்டு பல இடங்களில் ஆதரவாளர்கள் ஒன்றுகூடி வாழ்த்து தெரிவிப்பதை நாங்கள் கண்டோம். அப்போது இந்த சட்டத்தை பொலிஸார் அமுல்படுத்துவதை காணமுடியவில்லை. அப்படியென்றால் கொவிட் தொடர்பான சட்டம் கொவிட் பரவலை கட்டுப்படுத்துவதற்காக விடுக்கப்பட்ட அறிவிப்பு அல்ல. மாறாக அரசியல் ரீதியில் மேற்கொள்ளப்பட்டு போராட்டங்களை அடக்குவதற்கு விடுக்கப்பட்டிருக்கும் அறிவிப்பாகும்.

அத்துடன் இவ்வாறு கைது செய்யப்படுவபர்களை தனிமைப்படுத்துவதற்கு கொண்டுசெல்ல பொலிஸார் நீதிமன்றத்தில் அனுமதி கேட்டபோது, நீதிபதி அதனை நிராகரித்துள்ளார். நீதிமன்றத்துக்கு அந்த அதிகாரம் தனிமைப்படுத்தல் சட்டத்தில் இல்லை. அவ்வாறு இருந்தும் பொலிஸார் பலவந்தமாக அவர்களை முல்லைத்தீவு பிரதேசத்துக்கு தனிமைப்படுத்தலுக்காக அழைத்துச் சென்றிருக்கின்றனர்.

அப்படியானால் சாதாரண மக்களை பொலிஸார் கடத்திச் சென்றிருக்கின்றனர். அதனால் இவ்வாறு தனிமைப்படுத்தலுக்கு அழைத்துச் சென்றவர்களை உடனடியாக மீள அழைக்குமாறு உத்தரவிட வேண்டும். இது தொடர்பாக அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றையும் நாங்கள் தாக்கல் செய்ய இருக்கின்றோம். அத்துடன் நீங்கள் கைது செய்தாலும் நாங்கள் எமது போராட்டங்களை தொடர்ந்து செய்வோம் என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad