15 வயதான சிறுமி இணையத்தளம் ஊடாக விற்பனை : பாடகர் ஒருவரும் சிக்கினார், இதுவரை 38 பேர் கைது - News View

Breaking

Post Top Ad

Saturday, July 10, 2021

15 வயதான சிறுமி இணையத்தளம் ஊடாக விற்பனை : பாடகர் ஒருவரும் சிக்கினார், இதுவரை 38 பேர் கைது

(எம்.எப்.எம்.பஸீர்)

15 வயதான சிறுமி ஒருவர், இணையத்தளம் ஊடாக விளம்பரப்படுத்தப்பட்டு விற்பனை செய்த விவகாரத்தில், குறித்த சிறுமியை பணம் கொடுத்து பெற்று பலாத்காரம் செய்ததாக கூறப்படும் பாடகர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் துஷ்பிரயோக தடுப்பு பொலிஸ் பிரிவின் சிறப்புக்குழு கண்டி பகுதியில் வைத்து அவரைக் கைது செய்துள்ளது. அதன்படி கைது செய்யப்பட்ட பாடகர் இன்று கொழும்பு நீதிவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அதன்படி இந்த விவகாரத்தில் இதுவரை 38 சந்தேக நபர்கள் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஜூன் 7 ஆம் திகதி கல்கிசை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கிடைத்த தகவல் பிரகாரம் 15 வயதான சிறுமியை இணையத்தில் விற்பனை செய்தமை தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

இதனையடுத்தே இந்த விவகார விசாரணைகள் பொலிஸ்மா அதிபர் சந்தன விக்ரமரத்னவின் உத்தரவில் பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்திடம் கையளிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் சிரேஷ்ட பெண் பொலிஸ் அத்தியட்சர் தர்ஷிகா குமாரியின் நேரடி கட்டுப்பாட்டில், அவரது ஆலோசனைக்கு அமைய சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் மனோஜ் சமரநாயக்கவின் கீழ் அதன் விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி பிரதான பெண் பொலிஸ் பரிசோதகர் சமந்தி ரேனுகா தலைமையிலான குழுவினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இவ்விசாரணைகளுக்கு சி.ஐ.டி.யின் டிஜிட்டல் பகுப்பாய்வு பிரிவூடாக விசாரணைக்கு அவசியமான உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன.

பாதிக்கப்பட்ட சிறுமி தொடர்ந்தும் வட கொழும்பு போதனா வைத்தியசாலையில் வைத்தியர்கள் கண்காணிப்பில் உடலியல் மற்றும் மானசீக சிகிச்சைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad