அமைச்சர் சரத் வீரசேகர பாராளுமன்றத்தில் தெரிவித்த கருத்து முற்றிலும் பொய் - தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் - News View

Breaking

Post Top Ad

Friday, July 9, 2021

அமைச்சர் சரத் வீரசேகர பாராளுமன்றத்தில் தெரிவித்த கருத்து முற்றிலும் பொய் - தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர்

(நா.தனுஜா)

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களைத் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அழைத்துச் செல்லும்போது அனைத்து சுகாதாரப் பாதுகாப்பு வழிகாட்டல்களும் பின்பற்றப்பட்டதாகவும் அவசியமான பொருட்கள் பெற்றுக் கொடுக்கப்பட்டதாகவும் அமைச்சர் சரத் வீரசேகர பாராளுமன்றத்தில் தெரிவித்த கருத்து முற்றிலும் பொய்யானதாகும். எமக்கு அவசியமாக ஆடைகள், பற்பசை போன்ற அத்தியாவசியப் பொருட்கள், மருந்துப் பொருட்கள் எவையும் வழங்கப்படவில்லை. அவ்வாறிருக்கையில் பாராளுமன்றத்தில் பொய்யான தகவல்களைக் கூறி மக்களைத் திசை திருப்புவது கண்டனத்திற்குரிய செயற்பாடாகும் என்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஜோன் கொத்தலாவல தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழக சட்ட மூலத்திற்கு எதிராக பலதரப்பட்ட சிவில் சமூக அமைப்புக்கள் இணைந்து நேற்று வியாழக்கிழமை பத்தரமுல்லை பொல்துவ சுற்றுவட்டம் அருகே ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்திருந்தன. பொலிஸார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதன் பின்னர், தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

இதன்போது கைது செய்யப்பட்டு, பின்னர் தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ஜோசப் ஸ்டாலின், தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து வெளியிட்டிருக்கும் காணொளியிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது, நேற்று தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டவர்கள் அனைவரும் உரிய சுகாதாரப் பாதுகாப்பு வழிகாட்டல்களுக்கும் தனிமைப்படுத்தல் சட்டத்திற்கும் அமைவாகவே அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக அமைச்சர் சரத் வீரசேகர இன்று பாராளுமன்றத்தில் கூறுகின்றார். அது முற்றிலும் பொய்யான விடயமாகும்.

சுகாதாரப் பாதுகாப்பு வழிகாட்டல்களுக்கு அமைவாக எமக்கு அவசியமான பொருட்கள் எவையும் வழங்கப்படவில்லை. குறைந்தபட்சம் பொதுச் சுகாதாரப்பரிசோதகர் ஒருவரின் மேற்பார்வையின்றி எவ்வாறு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த முடியும்? 

பாராளுமன்றத்தில் இவ்வாறு பொய்யான தகவல்களைக் கூறி பொதுமக்களைத் திசை திருப்புவது முற்றிலும் தவறான விடயமாகும். நாம் இதனைக் கடுமையாகக் கண்டனம் செய்கின்றோம்.

எம்மைத் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அழைத்துச் சென்ற போதிலும் எமக்கு ஆடைகளோ அல்லது குறைந்தபட்சம் பற்பசையோ கூட அமைச்சர் சரத் வீரசேகரவினால் வழங்கப்படவில்லை. இங்கு அழைத்து வரப்பட்டவர்கள் இன்று (நேற்று) காலை வரை படுக்கை விரிப்புக்களையே அணிந்திருந்தார்கள். 

எம்மை அழைத்து வரும்போது, தனிமைப்படுத்தல் நிலையங்களில் அனைத்து வசதிகளும் இருப்பதாகக் கூறினார்கள். ஆனால் இங்கு எந்தவொரு வசதிகளும் இல்லை.

நீர்கொழும்பு பொலிஸாரால் எமக்கு அவசியமான மருந்துகள் வழங்கப்பட்டதாகவும் அமைச்சர் சரத் வீரசேகர கூறியிருக்கின்றார். அதுவும் முற்றிலும் பொய்யான தகவலாகும். 

இன்ஹெலர் (மூச்சுத்திணறல் பிரச்சினை உள்ளவர்கள் பயன்படுத்தும் மருத்துவ உபகரணம்) ஒன்றைக் கொள்வனவு செய்வதற்கு 1,500 ரூபா செலவாகும் என்பதால், எனக்கு பொலிஸார் அதனைக்கூடப் பெற்றுத் தரவில்லை.

அதுமாத்திரமன்றி எம்மை அழைத்துச் செல்லும்போது சிலாபம் பொலிஸ் நிலையத்திற்கு அண்மையில் பாணும் வாழைப்பழமுமே உணவாக வழங்கப்பட்டது என்று குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad