பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாட்டிற்காக என்ன செய்தார்? - பசில் நாட்டை விட்டுச் செல்லும்போது யாராலும் எந்தவொரு கேள்வியும் எழுப்ப முடியாத நிலையே காணப்படும் : ஹேஷா விதானகே - News View

Breaking

Post Top Ad

Friday, July 9, 2021

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாட்டிற்காக என்ன செய்தார்? - பசில் நாட்டை விட்டுச் செல்லும்போது யாராலும் எந்தவொரு கேள்வியும் எழுப்ப முடியாத நிலையே காணப்படும் : ஹேஷா விதானகே

(நா.தனுஜா)

மகிந்த ராஜபக்ஷவே போரை முடிவிற்குக் கொண்டுவந்ததாகவும் அவரே நாட்டின் எதிர்காலம் என்றும் கூறிவந்த ஆளுந்தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இப்போது கோட்டாபய ராஜபக்ஷவே போரை முடிவிற்குக் கொண்டு வந்ததாகவும் பசில் ராஜபக்ஷவினால் மாத்திரமே நாட்டின் பொருளாதாரத்தை, சீரமைக்க முடியும் என்றும் கூறுகின்றார்கள். அவ்வாறெனின் மகிந்த ராஜபக்ஷ நாட்டிற்காக என்ன செய்தார்? என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே கேள்வி எழுப்பியுள்ளார்.

அதேவேளை இலங்கையின் பிறப்புச்சான்றிதழைப் பெற்றுக் கொடுத்த மகிந்த ராஜபக்ஷ நாட்டின் தந்தையானதைப்போன்று, அமெரிக்காவின் பிறப்புச்சான்றிதழைப் பெற்றுக் கொடுக்கும் நிலையிலிருக்கும் பசில் ராஜபக்ஷ 'நாட்டின் தந்தையாக' மாறுவது அவ்வளவு இலகுவான விடயமல்ல என்று அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைக்காரியாலயத்தில் இன்று வெள்ளிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது, நாட்டின் சட்டத்தின் ஆட்சி முழுமையாகக் கேள்விக்குள்ளாக்கப்பட்டு, ஆட்சியாளர்களுக்கு ஏற்ற வகையில் அதனைக் கையாளக்கூடிய நிலையொன்று தோற்றம் பெற்றுள்ளமையை தற்போது வெளிப்படையாகவே அவதானிக்க முடிகின்றது. பொலிஸாரைப் பயன்படுத்தி தனிமைப்படுத்தல் சட்டத்தை அரசாங்கம் தமக்கேற்றவாறு பயன்படுத்த முனைவதையும் நேற்று தெளிவாகப் புரிந்துகொள்ள முடிந்தது.

தனிமைப்படுத்தல் சட்டத்தின் ஊடாக அரசியல் செயற்பாட்டாளர்கள், அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் தமது அபிப்பிராயத்தை வெளியிடுபவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரையும் கட்டுப்படுத்துவதற்கும் அடக்குவதற்கும் அவசியமான நடவடிக்கையை அரசாங்கம் முன்னெடுத்திருக்கின்றது.

நாட்டின் ஒட்டு மொத்த ஆசிரியர் சமூகத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குற்றத்திற்காக ஜோசப் ஸ்டாலின் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுத் தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

அதுமாத்திரமன்றி இந்தச் சட்டத்தை அரசாங்கம் ஒவ்வொரு தரப்பினருக்கும் வெவ்வேறு விதத்தில் நடைமுறைப்படுத்தி வருகின்றது. பாராளுமன்றத்தில் வைத்து உரிய விடயதானத்திற்குப் பொறுப்பான அமைச்சரிடம் இது குறித்துக் கேள்வி எழுப்பப்பட்ட போதிலும், அவரிடம் இதற்கான பதில் இல்லை. இதற்கு முற்றிலும் தொடர்பற்ற விடயங்களையே அவர் கூறுகின்றார்.

பொதுமக்கள் தமது கருத்துக்களை வெளியிடுவதற்கும் விமர்சனங்களை வெளியிடுவதற்கும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதற்கும் பாதிக்கப்பட்ட தரப்பினரைப் பிரதிநிதித்துவப்படுத்தி முன்நிற்பதற்கும் கடந்த அரசாங்கத்தில் வழங்கப்பட்டிருந்த சுதந்திரத்தைத் தற்போதைய அரசாங்கம் முழுமையாகப் பறிக்க முற்படுகின்றது.

நாட்டின் ஜனநாயகத்தையும் மக்களின் உரிமைகளையும் உறுதிப்படுத்தும் வகையில் அரசாங்கம் செயற்பட வேண்டும். அவ்வாறில்லாவிட்டால், எதிர்வரும் காலங்களில் நாட்டு மக்களின் உரிமைகளுக்காகப் பாராளுமன்ற உறுப்பினர்களாகிய நாங்கள் வீதிகளில் இறங்கிப் போராடத் தயாராக இருக்கின்றோம்.

எனவே தனிமைப்படுத்தல் சட்டத்தைப் பயன்படுத்தி, தமக்கு சவாலாக இருக்கின்ற தரப்பினரை அடக்குவதற்கும் தனிமைப்படுத்தலுக்காக அவர்களைத் தூரப்பிரதேசங்களுக்கு அழைத்துச் செல்வதையும் அரசாங்கம் உடனடியாக நிறுத்த வேண்டும்.

மகாசங்கத் தேரர்களின் ஆசியுடனும் ஆதரவுடனுமே இந்த அரசாங்கம் ஆட்சிபீடமேறியது. எமது நாட்டை சரியான பாதையில் கொண்டுசெல்வதற்கு கோட்டாபய ராஜபக்ஷவைப் போன்ற ஆட்சியாளரே அவசியம் என்று மகாசங்கத் தேரர்கள் கூறினார்கள். ஆனால் இன்று தேரர்களின் கால்களைப்பிடித்துத் தூக்கிச் செல்லும் நிலைக்கு அரசாங்கம் கீழிறங்கியிருக்கின்றது.

தேரர்களை அவ்வாறு மரியாதையின்றி நடத்தியமைக்குக் காரணம் என்னவென்று மகாசங்கத்திற்கு அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும். அதுமாத்திரமன்றி தேரர்களுக்கு உரிய கௌவரத்தை வழங்கிச் செயற்படுமாறு அனைத்து பௌத்த மக்கள் சார்பிலும் கேட்டுக் கொள்கின்றோம்.

தற்போது பாராளுமன்றத்தில் உள்ள தலைவர்கள், போர் முடிவிற்கு கொண்டு வரப்பட்டதன் பின்னர் அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிற்கு வழங்கக் கூடிய அனைத்து மரியாதைகளையும் கௌரவத்தையும் வழங்கினார்கள். மகிந்த ராஜபக்ஷவே நாட்டின் எதிர்காலம் என்று கூறி, அதன் மூலம் பாராளுமன்றம் வந்தவர்களும் இருக்கின்றார்கள்.

ஆனால் இப்போது போரை முடிவிற்கு கொண்டு வந்தவர் என்று யாரும் மகிந்த ராஜபக்ஷவின் பெயரைக் கூறவில்லை. மாறாக கோட்டாபய ராஜபக்ஷவே போரை முடிவிற்கு கொண்டு வந்தார் என்றும் நான்கு மூளைகள் உள்ள பசில் ராஜபக்ஷவினாலேயே நாட்டின் பொருளாதாரத்தை சீரமைக்க முடியும் என்றுமே பாராளுமன்றத்தில் உள்ள ஆளுந்தரப்பு உறுப்பினர்கள் அனைவரும் கூறுகின்றார்கள்.

அவ்வாறெனின் மகிந்த ராஜபக்ஷ நாட்டிற்காக என்ன செய்திருக்கின்றார்? மகிந்த ராஜபக்ஷ 'நாட்டின் தந்தை' ஆகியதைப் போன்று பசில் ராஜபக்ஷ 'நாட்டின் தந்தையாக' மாறுவது அவ்வளவு இலகுவான விடயமல்ல என்பதைக் கூறிக் கொள்ள விரும்புகின்றோம்.

மகிந்த ராஜபக்ஷ நாட்டின் தந்தையாக மாறி, அனைவருக்கும் இலங்கையின் பிறப்புச்சான்றிதழைப் பெற்றுக் கொடுத்தார். ஆனால் பசில் நாட்டின் தந்தையானால், அமெரிக்காவின் பிறப்புச்சான்றிதழையே பெற்றுக் கொடுப்பார்.

அரசாங்கத்தினால் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் செயற்பாடுகளைப் பார்க்கும்போது, நாம் ஒரேயொரு விடயம் தொடர்பில் நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுக்க விரும்புகின்றோம்.

பசில் ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு எவ்விதத்திலும் பொறுப்புக் கூறாமல், நாட்டின் பொருளாதாரத்தை தற்போதுள்ள நிலையை விடவும் மோசமாக்கி, இறுதியில் நாட்டை விட்டுச் செல்லும்போது யாராலும் எந்தவொரு கேள்வியும் எழுப்ப முடியாத நிலையே காணப்படும் என்பதைப் பொதுமக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad