சுபீட்சத்தின் நோக்கு கொள்கை பிரகடனத்திற்கமைய பேண்தகு விவசாய அபிவிருத்தி தொடர்பான திருகோணமலை மாவட்ட கலந்துரையாடல் புதன்கிழமை (28) மாவட்ட செயலகத்தில் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தலைமையில் நடைபெற்றது.
அடுத்து பெரும் போகத்திற்கு தேவையான சேதனப் பசளை விவசாயிகளுக்கு உரிய காலத்தில் வழங்கி வைக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.
இரசாயன வளமாக்கி இறக்குமதிக்காக பாரிய நிதி வெளிநாடுகளுக்கு வருடாந்தம் செல்லுகின்றது. இதன் மூலம் நாடு பாரிய பின்னடைவை எதிர் நோக்குகின்றது.
எனவே இந்நிலைமையை மாற்றி அமைத்து எமது நாட்டுக்கு தேவையான சேதனப் பசளைகளை நாட்டில் உற்பத்தி செய்து அதனை விவசாயிகளுக்கு வழங்குவதன் மூலம் சுற்றாடல் நேயமிக்க விவசாய செயல்பாடுகளை மேற்கொள்ள முடியும்.
இன்று நாட்டில் அதிகமான பிரதேசங்களில் இரசாயன வளமாக்கி பாவனை காரணமாக மக்கள் சிறுநீரக நோய் உட்பட பல்வேறு வகையான நோய்களுக்கு உட்பட்டு சிரமப்படுகின்றனர்.
எனவே எதிர்கால பரம்பரையினரையாவது சிறுநீரக நோய் உட்பட பல்வேறு வகையான நோய்களில் இருந்து பாதுகாத்து ஆரோக்கியமான சமூகம் ஒன்றை கட்டியெழுப்பும் நோக்கில் சேதன முறையிலான விவசாயம் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சேதன முறையைப் பயன்படுத்தி பயிர் செய்கை மேற்கொள்கின்ற சந்தர்ப்பத்தில் ஹெக்டயர் ஒன்றிற்கு 12 ஆயிரத்து 500 ரூபா அரசாங்கத்தினால் சேதன பசளை உற்பத்திக்கு மானியமாக வழங்கப்பட உள்ளது.
சேதனப் பசளையை பயன்படுத்தி விவசாயம் மேற்கொள்ளுகின்ற சந்தர்ப்பத்தில் விவசாயிகளுக்கு உற்பத்தி அல்லது வருமான இழப்பு ஏற்படும் சந்தர்ப்பத்தில் அதனையும் வழங்குவதற்கு அரசாங்கம் தயாராக இருக்கின்றது. தூரநோக்கு அடிப்படையில் ஜனாதிபதியால் இந்த திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது. இதற்கு மக்கள் அனுமதி வழங்கியுள்ளார்கள்.அதனையே நாம் செயற்படுத்துகின்றோம்.
திருகோணமலை மாவட்டத்தில் உள்ள கமநல அபிவிருத்தித் திணைக்கள அலுவலகங்கள் விரைவில் புனர்நிர்மாணம் செய்யப்படும். எதிர்வரும் காலங்களில் கமநல அபிவிருத்தித் திணைக்களத்திற்கு தேவையான இயந்திர சாதனங்களை வழங்கவுள்ளோம். இச்செயற்பாடு விவசாயிகளுக்கு சாதகமானதாக அமையும்.
தூர்ந்து போயுள்ள குளங்களை புனர்நிர்மாணம் செய்தல் மற்றும் வடிகால் அமைப்புகள் புனர்நிர்மாணம் செய்தல் உட்பட பல்வேறு வகையான விடயங்கள் இதன்போது கலந்துரையாடப்பட்டன.
அத்துடன் மாவட்ட விவசாய சங்க பிரதிநிதிகள் இதன்போது அமைச்சரிடம் பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்ததுடன், குறித்த பிரச்சினைகளுக்கு உடனுக்குடன் தீர்வுகளை வழங்கி அவசியமான செயற்பாடுகளை நடைமுறைப்படுத்துமாறு உரிய அதிகாரிகளை அமைச்சர் இதன்போது அறிவுறுத்தியமை விசேட அம்சமாகும்.
திருகோணமலை மாவட்ட விவசாய அபிவிருத்திக்கு இவ்வருடம் அரசாங்கத்தினால் 500 மில்லியனுக்கு மேற்பட்ட ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக பாரிய விவசாய அபிவிருத்தி செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. விவசாயிகளுடைய செயற்பாடுகளை பலப்படுத்தி தேசிய பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு அவசியமான செயற்பாடுகள் தற்போது அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இக்கலந்துரையாடலில் இராஜாங்க அமைச்சர் சசீந்திர ராஜபக்ஷ, திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கபில நுவன் அத்துக்கோரல, பிரதேச அரசியல் தலைமைகள், கிழக்கு மாகாண பிரதம செயலாளர் துசித்த பீ வணிகசிங்க, திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராள, அமைச்சின் அதிகாரிகள், திணைக்கள தலைவர்கள், சக உத்தியோகத்தர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டனர்.
திருமலை மாவட்ட விசேட, கந்தளாய் நிருபர்கள்
No comments:
Post a Comment