கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்படும் தீர்மானங்களை அவ்வாறே நிறைவேற்றுங்கள் : சஜித், அநுரகுமார சபாநாயகருக்கு எடுத்துரைப்பு - News View

Breaking

Post Top Ad

Thursday, July 8, 2021

கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்படும் தீர்மானங்களை அவ்வாறே நிறைவேற்றுங்கள் : சஜித், அநுரகுமார சபாநாயகருக்கு எடுத்துரைப்பு

(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)

பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பாக கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்படும் தீர்மானங்களை ஆளும் கட்சிக்கு தேவையான முறையில் மாற்றுவதற்கு இடமளிக்கக் கூடாது. அவ்வாறு இடம்பெறுமாக இருந்தால் அது பாராளுமன்ற சம்பிரதாயத்துக்கே முரணாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் மக்கள் விடுதலை முன்னணி தலைவர் அநுரகுமார திஸாநாயக்க எடுத்துரைத்தனர்.

பாராளுமன்றம் இன்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் கூடியது. பிரதான நடவடிக்கைகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து, நிலையியற் கட்டளை 27/2 இன் கீழ் கேள்வி எழுப்புவதற்காக அநுரகுமார திஸாநாயக்க எழுந்து, கேள்வியை முன்வைப்பதற்கு முன்னர் ஒழுங்கு பிரச்சினை ஒன்றை எழுப்பி தெரிவிக்கையில், மத்திய வங்கி அறிக்கை தொடர்பான பாராளுமன்ற விவாதம் ஒன்று தேவை என நான் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தொடர்ந்து கேட்டு வந்தேன். அதன் பிரகாரம் நாளை வெள்ளிக்கிழமை பாராளுமன்ற சபை ஒத்தி வைப்பு பிரேரணையாக அதனை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ள தீர்மானிக்கப்பட்டது. அதன் பிரகாரம் நாளை (இன்று) அது இடம்பெறுகின்றதா என கேட்டபோது சபாநாயகர் அதற்கு தெளிவாக பதிலளிக்காமல், நாளை சபை ஒத்து வைப்பு விவாதம் அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கும் என்றே எனக்கு அறிவிக்கப்பட்டிருக்கின்றது என்றார்.

இதற்கு அநுகுமார திஸாநாயக்க, என்னால் பிரேரணை கொண்டுவந்து விவாதிப்பதென்றே கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. தற்போது அரச தரப்பினால் பிரேரணை கொண்டுவருதென்று எவ்வாறு தெரிவிக்க முடியும்?

பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பில் கட்சித் தலைவர்கள் கூட்டம் சபாநாயகரான உங்கள் தலைமையில் கூடி, ஒரு தீர்மானம் எடுத்த பின்னர் அதனை செயற்படுத்துவதே உங்கள் கடமை. அவ்வாறு இல்லாமல் ஆளும் கட்சிக்கு தேவையான மாதிரி, அவர்கள் தெரிவிப்பதன் பிரகாரம் செயற்படுத்துவதாக இருந்தால் அக்கிராசனத்தில் நீங்கள் இருப்பதன் பயன் என்ன?

நீங்கள் பொதுஜன பெரமுன கட்சியில் தெரிவானாலும் சபாநாயகர் என்ற வகையில் ஆளும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் உரிமைகளை பாதுகாப்பது உங்கள் கடமை என்றார்.

அதனைத் தொடர்ந்து எழுந்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அநுரகுமார திஸாநாயக்கவின் பிரேரணையை எடுத்துக் கொள்வதாகவே கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. அந்த தீர்மானத்தை யார் மாற்றுவது? அதற்கு இடமளிக்க முடியாது என்றார்.

அதனைத் தொடர்ந்து எழுந்த சபை முதல்வர் அமைச்சர் தினேஷ் குணவர்த்தன, இந்த வார பாராளுமன்ற அமர்வில் சபை ஒத்தி வைப்பு பிரேரணை கொண்டு வர இரண்டு தினங்கள் என்ற அடிப்படையில் ஆளும், எதிர்க்கட்சிக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டது. மத்திய வங்கி அறிக்கை தொடர்பில் பாராளுமன்ற விவாதம் ஒன்றுக்கு அநுர குமார திஸாநாயக்கவுக்கு இடமளிக்க தீர்மனிக்கப்பட்டது. அதன் பிரகாரம் நாளை அரச தரப்பினால் பிரேரணை கொண்டு வர தீர்மானித்திருக்கின்றது என்றார்.

அதனைத் தொடந்து மீண்டும் எழுந்த சஜித் பிரேதமாச, அநுரகுமார திஸாநாயக்கவின் பிரேரணையை கொண்டு வரவே கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதை நான் உறுதியாக தெரிவிக்கின்றேன். அவ்வாறு தீர்மானிக்கப்பட்டதை யாராவது மாற்றுவதாக இருந்தால், அது பாராளுமன்ற ஜனநாயகத்துக்கு முரணாகும். அதனால் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்படும் தீர்மானங்களை அவ்வாறே நிறைவேற்றுங்கள். அதனை இழிவு படுத்த வேண்டாம் என்றார்.

அதனைத் தொடர்ந்து சபாநாயகர், இது தொடர்பில் கட்சித் தலைவர்கள் கூடி தீர்மானம் எடுப்போம் என தெரிவித்து, கட்சித் தலைவர்களின் கூட்டத்துக்காக 12 மணியளவில் சபையை சபாநாயகர் ஒத்தி வைத்தார். இறுதியில் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் அநுரகுமார திஸாநாயக்கவுக்கு பிரேரணையை கொண்டுவர தீர்மானிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad