மின்னேரியா வனஜீவராசிகள் அதிகாரிகள் குழுவினருக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் தொடர்பில், கடமைக்கு இடையூறு விளைவித்த சம்பவத்தில் இலங்கை இராணுவத்தின் மேஜர் ஜெனரல் அதிகாரி ஒருவர் கைதாகி பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இராணுவத்திற்கு அபகீர்த்தி ஏற்படும் வகையிலான தகவல்கள் வெளியிடப்படுவதாக தெரிவித்து, ஹபரண பொலிஸ் நிலையத்தில் இன்று காலை சரணடைந்த குறித்த மேஜர் ஜெனரல் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து, பாதுகாப்புப் படைத் தலைவரும், இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா உடனடியாக விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு, இரண்டு மேஜர் ஜெனரல்கள் தலைமையிலான குழுவொன்றை நியமித்துள்ளார்.
கடந்த ஜூன் 25ஆம் திகதி ஹபரண பகுதியில் இடம்பெற்ற குறித்த வாக்குவாத சம்பவம் தொடர்பில் தமது கடமைகளுக்கு இடையூறு விளைவிக்கப்பட்டதாக, வனஜீவராசிகள் அதிகாரிகள் ஹபரண பொலிசில் முறைப்பாடு பதிவு செய்திருந்தனர்.
அதற்கு சமாந்தரமாக, சம்பவத்தை தொடர்ந்து இராணுவ பொலிஸ் பிரிவும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக, இராணுவ ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த விடயம் தொடர்பான விடயங்களை ஆராய்ந்து வரும் இக்குழு, விரிவான விசாரணை அறிக்கையை விரைவில் இராணுவத் தளபதியிடம் சமர்ப்பிக்குமென எதிர்பார்க்கப்படுவதாக, இராணுவ ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment